பாடாய் படுத்தும் தலைவலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்!

நன்றி குங்குமம் தோழி

சிலர் அடிக்கடி தலை வலியினால் அவதிப்படுவார்கள். ஒரு சிலருக்கு காலையில் எழும் போதே உடன் தலைவலியும் சேர்ந்து வரும். தலைவலி ஏற்பட மன அழுத்தம், நீர்ச்சத்து பற்றாக்குறை என பல காரணங்கள் இருக்கலாம். தலைவலி என்றால் உடனே மாத்திரை போடுவதை தவிர்த்து அதற்கான முறையான சிகிச்சை எடுப்பது அவசியம்.
அடிக்கடி தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்கள்…

* ரத்த அழுத்தம்: தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.

* ரத்த சோகை: உடலில் ரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம். உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

* சர்க்கரை அளவு: உடலில் சர்க்கரை அசாதாரணமாக இருந்தால், காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

* நீரிழப்பு: உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரும் வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல், உடல் டீஹைட்ரேஷன் ஏற்படும்.

* தூக்கமின்மை: சரியான தூக்கம் இல்லாததும் தலைவலிக்கு ஒரு காரணம். மன அழுத்தமும் தலைவலி ஏற்பட ஒரு காரணமாக மாறும். சிலருக்கு காலை இரவு என வேலை நேரம் மாறி மாறி இருக்கும். இதனால் நிறைவான தூக்கத்தில் தடை ஏற்படும்.

தலைவலி ஏற்படும் போது செய்ய வேண்டியவை…

* இஞ்சி தலைவலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. புதினா எண்ணெயை நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டால் தலைவலி நீங்கும்.

* சுக்குப் பொடியை நீர் விட்டு குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். உடலில் தேவையான அளவு நீரில்லாத போது ஏற்படும் தலைவலிக்கு தண்ணீர் குடித்தாலே தலைவலி நீங்கும்.

* காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வந்தால், தலைவலி ஏற்படாது.

– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

The post பாடாய் படுத்தும் தலைவலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: