படிப்படியாக குறையும் ஒன்றிய அரசின் மானியம்.. அதிகரித்து வரும் தமிழ்நாடு அரசின் வருவாய் : நிதித்துறை செயலாளர் விளக்கம்

சென்னை: தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தொடர்பாக பேசிய அவர், “தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்டமைப்பு செலவுகளுக்காக 2024-25 நிதியாண்டில் ரூ.47681 கோடி செலவிட உள்ளோம். 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும். மாநில அரசின் வரிவருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-24-ல் வரி வருவாய் ஒரு லட்சத்து 70,147 கோடி ரூபாயாக உள்ளது. மாநில வரி வருவாய் 2024-25-ல் ஒரு லட்சத்து 95ஆயிரத்து 173 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.

வணிகவரித்துறை உள்ளிட்ட பல துறைகளில் எடுக்கப்பட்ட சீர்திருத்தங்களால் மாநில அரசின் வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களால் தமிழகத்தின் வருவாய் குறைந்துள்ளது. நிவாரணத் தொகைக்காகவே அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் அடுத்த ஆண்டு அதிக வருவாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அரசு சொல்லும் நிதிப் பற்றாக்குறை வரம்புக்குள் தமிழ்நாடு உள்ளது. 3 ஆண்டுக்கு முன்பு ரூ.1.22 லட்சம் கோடியாக இருந்த மாநில வரிவருவாய் வரும் நிதியாண்டில் ரூ.1.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கும் வரி தொடர்ந்து சரிகிறது. ஒன்றிய அரசின் தமிழ்நாட்டுக்கான நிதிப்பகிர்வு 6.64%ஆக இருந்த நிலையில் 14-வது நிதிக்குழுவில் 4.02%ஆக சரிந்துள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்காக போட்டி தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசு வழங்கும் மானியமும் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. 2021-22-ல் ரூ.35,051 கோடி மானியம் வழங்கிய ஒன்றிய அரசு 2023-24-ல் ரூ.26,996 கோடியாக குறைத்துள்ளது. பத்திரப்பதிவு மூலம் ரூ.23,370 கோடி வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும்.முதலாமாண்டு 30% மானியம், 2-ம் ஆண்டு 20 சதவீதம் மானியம். 3-ம் ஆண்டு 10 சதவீதம் ஊதிய மானியம் வழங்கப்படும்.கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதற்கான உகந்த சூழல் ஏற்படுத்தப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post படிப்படியாக குறையும் ஒன்றிய அரசின் மானியம்.. அதிகரித்து வரும் தமிழ்நாடு அரசின் வருவாய் : நிதித்துறை செயலாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: