நடுநெற்றிப் பௌர்ணமி-3

நன்றி குங்குமம் ஆன்மீகம்

குறிஞ்சித்தேவன் நடந்தவை முழுதும்சொல்ல. பெரியவர் அமிர்தலிங்கமைய்யர். ‘இவையெல்லாம் முன்பே அறிந்தவர்போல. அவனை ஒருபார்வை பார்த்தபடியே கொஞ்சமும் பதைக்காது. உள்ளே, வீட்டின் உட்கூடம் நோக்கி, ‘‘அம்மாடி, சுப்பிரமண்யம் இருக்கானா? என குரல்கொடுத்தார். உள்ளே இல்லையென தெரிந்ததும், அவசரமாக வேட்டியை அவிழ்த்து. இறுக்கிக் கட்டிக் கொண்டு, துண்டுவிரித்துதறி, குளிருக்கு போர்த்தியபடி, ‘‘எப்போது எழுந்து போனானிவன்’’ என தனக்குத்தானே பேசிக்கொண்டே கிளம்பினார்.

சில நிமிட நடையில், கிசுகிசுத்தபடி பேசிக்கொண்டிருந்த கும்பலைத்தாண்டி, இருவரும் சுப்ரமண்யத்தை நெருங்கினார்கள். முனீஸ்வரகோபுர வாசலுக்கு வெளியே. ஆட்கள் சுற்றி நிற்க, ஒரு கருங்கல் மேடைமீது, அமைதியாக அமர்ந்திருந்த சுப்ரமண்யம், தந்தையைப் பார்த்ததும், அழகாய் புன்னகைத்து ‘அப்பா’ என்றார். கொஞ்ச நேரம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தவரா இவர் என குறிஞ்சித்தேவனுக்கு வியப்பாகயிருந்தது பெரியவர் வாஞ்சையாய் தன்மகனின் தலை தடவி, மேல்துண்டெடுத்து முகம் துடைத்துவிட்டபடி, ‘‘என்னடா இது’’ என கவலையுடன் கேட்டார்.

‘ஓய், அமிர்தலிங்கம், உம்மவனை வீட்டிற்கு கூட்டிண்டுபோய் கொஞ்சுமய்யா. காலையிலேயே அவனால் இங்கு ஒரே களேபரம்’ ‘வரவர பெண்டுகள் வெளியே வர இயலாதபடிக்கு பெரும்தொந்தரவு செய்கிறான். எப்போதும் இதே ரோதனையாய் போச்சு’’ ஏன் அவனை வெளியே விடறேள். புத்திக்கு சுகமில்லாதவனை, வீட்டுக்குள்ளே பொத்தித்தான் வைக்கோணும். தெரியுமில்லையோ’’

அந்தணக் கும்பல் ஏசியது. அதிலும் யாரோவொரு பச்சைக்கடுக்கன் கிழம். அதிகம் கைநீட்டிப்பேசியது. ‘‘போதும், நிறுத்துங்கோ’’ பெரியவர் சீறினார். குறிப்பாக, அந்த பச்சைக்கடுக்கன் பார்த்து, வாய்மேல் கைவைத்து சைகைசெய்தார். பெரியவரின் கோபத்துக்கு, பச்சைக்கடுக்கன் பயந்தடங்கியது ‘சரிவிடுங்கோ, நல்லாயிருந்த புள்ளையாண்டான் அவன். ஏதோ கிரகாச்சாரம். இப்படி புத்தி பேதலிச்சுபோய் நிக்குறான்’’ என யாரோ சொல்லிய சொல்லுக்கு, வேதனையில் கண்கள்கலங்கியபடி, பெரியவர், மகனையெழுப்பி, அணைத்தபடி, கூட்டம்தாண்டி அழைத்துப் போனார்.

குறிஞ்சித்தேவன் பத்தடி இடைவெளிதொலைவில் அப்பா, மகன் இருவரையும் தொடர்ந்தான். தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளையை, தோளில் சாய்த்து அழைத்துப் போகிற, தகப்பனைப் பார்க்க, சந்தோசமாக இருந்தது ‘‘உண்மையில், பெரியவர் நல்ல தகப்பன். சுப்பிரமண்யம் நிஜத்தில் கொடுத்துவைத்தவர்’’ என மனசுக்குள் பேசிக்கொண்டான்.
நன்கு விடிந்துவிட்டபொழுதில், வீட்டை நெருங்கியதும், ஒரு இளம்பெண் ஓடி வந்தாள். அந்நியனான தேவனை கண்டதும், நடை நிதானமாகிய அவள், வேகநடை நடந்து. நெருங்கிவந்து, பெரியவரிடமிருந்து, சுப்பிரமணியத்தை வாங்கினான். தாங்கிப்பிடித்தாள்.

‘‘சுப்பிரமண்யத்தின் மனைவிபோல’’ என நினைத்துக்கொண்ட குறிஞ்சித்தேவன், அப்போதுதான் அவள்முகம் கவனித்தான் ‘‘அந்தப்பெண்ணுக்கு அப்படியே அம்பாள்முகம் கண்டதும் கைகூப்பி வணங்கத் தோன்றுகிற தெய்வ கடாட்சம்’’ அவன் வியந்து கொண்டிருக்கும்போதே. கண்விழித்த சுப்பிரமணியம், தாங்கிப்பிடித்திருக்கும் மனைவியை கண்டு, தெருவென்றும் பார்க்காமல் ‘‘அம்மா லோகமாதா!’’ என்றபடி, காலில் விழப்போனார். சடாரென குனிந்து, அவர் கைகளைப்பற்றிய, அவர்மனைவி, அவரைப் பார்த்து புன்னகைத்து, ‘‘போதும்’’ என சொல்லி, வீட்டுக்கு
அழைத்துப் போனாள்.

வாசலுக்கு வெளியே நின்றிருந்த குறிஞ்சித்தேவன் அதிர்ந்துபோனான். ‘‘இதை நான் செய்வேனா? நடுவீதியில், இப்படி என்ஆத்தாளை, என்அப்பன் விழுந்து வணங்குவானா? இந்த திருக்கடவூர் ஜனம். இவ்விதம் செய்யுமா?’’ கண்டதை கேள்வியாக்கி, தன்னையே கேட்டுக்கொண்டான்.‘‘இவர் பித்துஇல்லை. இவரைப் புரியாதவர்க்கே இவர் பித்து இந்த ஜனங்களுக்கு இவரைப் புரியவில்லை. தான் ஆளுமைசெய்கிற மனைவியிடமே தெய்வத்தைக் காணுகிறவன். ஊரார்பெண்களை வேறெப்படி நோக்குவான்? தான் பெண்டாளுகிறப்பெண்ணையே, அம்பாளாக விழுந்து வணங்குகிற மனநிலை கொண்டவன், மற்ற பெண்களை வேறெப்படி பார்ப்பான். இவர் நிலை வேறு இது சிறுகொட்டாரத்தில் அடைக்கப்பட்ட யானையின்நிலை.

உண்மையில், இவர் பௌர்ணமி பார்த்தவர். அந்த உச்சிநிலா பிரகாசம். இவர்முகத்தில் ஜொலிக்கிறது. நிச்சயம் இவரால் இந்தத் திருகடவூரே, பௌர்ணமியாய் பிரகாசிக்கப்போகிறது’’ புரிந்ததும். புரியாமலும் யோசித்துக்கொண்டிருந்த குறிஞ்சித்தேவன், வீட்டின் படியேறிக் கொண்டிருந்த சுப்ரமண்யத்தின் முதுகைப் பார்த்து, தன்னையும்மீறி, கைகூப்பினான். கதவுதிறந்து, வீட்டுக்குள் நுழையப்போன சுப்ரமண்யம், நின்றார். கைககள்கூப்பி நிற்கின்ற குறிஞ்சித்தேவனை திரும்பிப் பார்த்து. அழகாய் புன்னகைத்து, ‘‘நீயும் பௌர்ணமி பார்ப்பாய்’’ என்று சொல்லிவிட்டு, திரும்பி நடந்து, உட்கூடத்துக்குள் மறைந்துபோனார்.

குறிஞ்சித்தேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அதிர்ச்சி நீங்காமல், விதிர்த்துப்போன அவன், நடுவீதியில் நின்றபடியே விசும்பி உடைந்தழுதான். ஏனழுகிறோம் என்று புரியாமல் குலுங்கியழுதான். தெருவில் நின்றழுகிறவனை, ஊர் வியப்புடன் பார்த்தது.‘‘நீயும் பௌர்ணமி பார்ப்பாய்’’ என்கிற அந்தச் சொல்லின் அர்த்தமும், புரியாமல், ஏன் வாய்கோணி அழுகிறோமென்பதன் காரணமும் புரியாமல், அழுதுகொண்டிருந்தவன், ஊர் பார்ப்பது உறைத்தது. அழுகையடக்கினான். முகம் துடைத்துக்கொண்டு, விறுவிறுவென நடந்து. மாடவீதிகள் தாண்டினான். எதிர்ப்பாதையில் இடப்பக்க மிருந்த தென்னந்தோப்பை கடந்து, வலதுபக்கம் திரும்பி, வயல்வெளி வரப்புகளில் நடந்து, பெருநிலவெளியில் மழைநீரால் உருவாகியிருந்த குட்டையில் இறங்கி, ‘சளேர் சளேரென’ நீரை வாரியிறைத்து, கைகால், முகத்தை அலம்பிக்கொண்டான்.

இரவுவேளை களைப்புக்கு, ‘‘எங்கேனும் சற்றுப் படுத்தால் தேவலை’’ என்று தோன்ற, கரையோரமாய் விழுதுகளோடு, நிழலுமாய் படர்ந்திருந்த, சிறு ஆலமரத்தின் கீழ், வேர்த்திண்டில் தலைவைத்து, இரவுக்குளிரும், விடிகாலைவெயிலின் கதகதப்பும் கலந்து வீசிய காற்றுக்கு, அப்படியே ஆழ்ந்து தூங்கிப் போனான்.நல்ல உறக்கத்தில் குறிஞ்சித்தேவனுக்கு பேய்ப்பசி எடுத்தது திடீரென உறைத்து.

சட்டென எழுந்து சுற்றிப்பார்க்க, இருப்பது காட்டுப்பாதைபோல் தெரிந்தது, கையில் தீப்பந்தம்வேறு ‘‘மாடவீதிகளில் விளக்கேற்றுபவனுக்கு, காட்டிலென்னவேலை?’’ என குழப்பினான். குழப்பத்தை தள்ளிவைத்து விட்டு, பசிக்கு ஏதாவது கனிமரங்கள் தென்படுகிறதாவென சுற்றிப்பார்க்க, ஒன்றுகூட இல்லை. எல்லா மரங்களும் நீலமும், மஞ்சளும் கலந்த பூக்களாய் பூத்துக்குலுங்கியிருந்தன. பார்க்க அழகாயிருந்தது ஆனால், அந்த அழகை ரசிக்க முடியாதபடிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது காட்டின் இளம்பச்சை வாசனை காரணமாக, அதிகம் பசித்தது அவன் வேகமாக மரம் தேடி, முழுநில வொளி வெளிச்சத்தில் காட்டுக்குள் நடந்தான்.

போகும்போது, பாதையில் பாம்பொன்று கடந்துபோனது. அதிர்ந்து நிற்கையில், எங்கோ காட்டின் மூலையில், நரியும், ஓநாயும் ஊளையிட்டன. இடைவெளிவிட்டு ஆந்தை அலறியது. ஒன்றுதொட்டு ஒன்றாக, தொடர்ந்து வனவிலங்குகள் கதறி பயமுறுத்தின. அவன் சற்றே பயந்தாலும், கலங்காமல் பாதையின் வெகுதூரம் நடந்துபோய், கனிமரம் தேடியபோது. வலப்பக்கமூலையில், அங்கும் ஒருஆலமரமிருந்தது. அகண்டிருந்து விழுதுகளை நிலத்தில் படரவிட்டிருந்த அந்த மரத்தில், கொத்துக்கொத்தாக, மாதுளைப் பழங்கள் தொங்கிக்
கொண்டிருந்தன.

அவன் மாதுளஞ்செடி கண்டிருக்கிறான். இதுபோல் மாதுளமரம் கண்டதேயில்லை. இதென்ன ஆலமரத்தில் மாதுளை? என வியந்தபடி, மரத்தை நெருங்க, மரத்தின் அகலமான அடித்தண்டில் சாய்ந்தபடி, தோள்முழுக்க, வேஷ்டியை போர்த்திக்கொண்டு சுப்ரமண்யம் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். கண்கள்மூடி லயத்தில் இருந்தவர். மெல்ல கண்திறந்து நெருங்கியவனைப் பார்த்து, புன்னகைத்து, ‘பசிக்கிறதா?’ என்றார்.

தயக்கத்துடன் ஆமென்று சொல்ல, பால் வண்ணத்தில் பளபளத்து ஒளிர்ந்த ஒன்றை கையில் தந்தார். வாங்கி உற்றுப்பார்க்க, தட்டாக வானத்துநிலவு. அதிர்ந்துபோய், நிமிர்ந்து வானம்பார்க்க, வானத்தின் நிலவே அவன்கையில் தட்டாகயிருந்தது. அவன் வியப்புடன் அவரை நோக்க, அவர் ஒருமாதுளைப்பழம் பறித்து. அவரேயுரித்து. மாதுளை முத்துக்களை நிலாத்தட்டில் வைத்து ‘‘சாப்பிடு’’ என்றார். நிலாத்தட்டில் மாதுளையா? வியப்புடன் அவரிடம் ஏதோ கேட்க நினைத்துக்கொண்டிருக்கும்போதே. பளீரென வெளிச்சத்தில் காணாமல் போனார்.

குறிஞ்சித்தேவன் திடுக்கிட்டு உறக்கம்கலைந்தான். விழித்துப்பார்க்க, எதிரே முகம் கழுவிய குட்டை தெரிந்தது நிஜம் புரிந்தது. மொத்தமும்கனவு ‘‘இதென்ன கனவு அதுவும் பகலில் ஒருவேளை. கடவுளைக் குறித்த என் ஏக்கமே கனவாக வருகிறதா? சூட்சுமமாய் ஏதேனும் தெரிவிக்கிறதா? ஆனால், கனவு நன்றாகயிருந்தது கையில் தட்டாக முழுநிலவு அதுவும், அந்த சுப்ரமண்யம் என்னிடம் தருவது போல’’ கனவை யோசிக்க, உடலும் மனமும் லேசானது போலிருந்தது அவனுக்கு.

அவரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணமெழுந்தது நிதானமாகவெழுந்தது. மறுபடியும் மாடவீதிகளை கடந்து, சுப்ரமண்யம் வீடுநோக்கி நடந்தான் வீட்டை நெருங்கியபோது, அமிர்தலிங்கமைய்யர் வாசலில் உதிர்ந்துகிடந்த பவளமல்லிகளை, குனிந்து பொறுக்கி, கூடையில் சேகரித்துக்கொண்டிருந்தார் வாசலை நெருங்கியவனை. யாதேச்சையாக திரும்பிப் பார்த்த அவர், மலர்ச்சியாகப் புன்னகைத்து, ‘‘நீ விடிகாலையில் வந்த வன்தானே?’’ என்றார்.

‘‘ஆமாங்க’’‘‘என் மகனை வேடிக்கை பார்த்துண்டு இருந்தவங்க மத்தியில, தேடி வந்து விஷயம் சொன்னியே. ரொம்ப நன்றிப்பா நன்னாயிரு’’ அமிர்தலிங்கமய்யர் ஒருகைதூக்கி ஆசிர்வதித்தார். ‘‘ஒரு நாழிகையிரு’’ என்றபடி, பூக்கூடையை திண்ணையில் வைத்துவிட்டு, தன் இடுப்பு வேட்டியில் முடிந்திருந்த நாணயங்களிலிருந்து. ஒருபணமெடுத்து நீட்டினார். குறிஞ்சித்தேவன் வேகமாக மறுத்தான். ‘‘வேண்டாங்கய்யா’’.

‘‘கருப்பட்டி பானம் சாப்பிடுறயா?’’
அதையும் மறுத்தவனை, உறுத்துப்பார்த்தபடியே திண்ணையில் அமர்ந்தவர். ‘‘நீ மலையாண்டியின் மகன்தானே’’ என்றார். ஆமென குறிஞ்சித்தேவன் தலையாட்ட, ‘‘உன் அப்பன், நாங்க குடும்பமாய் ஷேத்திரயாத்திரை போறச்சே, பாதுகாப்பாக வர்றவன். மலையாண்டி நல்லவன், நேர்மையாளன். மிகுந்த இறைபக்தியுள்ளவன். அதுகுறித்து நிறைய கேள்விகள் எழுப்புபவன். அவன்மகனா நீ? நல்லது இப்போதெதற்கு இங்கு வந்தே?’’ பெரியவர் கேள்வியோடு முடித்தார்.

‘‘உங்கமகனை பாக்கலாம்னு வந்தேன்’’
‘‘அவனை ஏன் பாக்கணும்?’’ பெரியவர் சற்று வேகமாகவே கேட்டார். குறிஞ்சித்தேவன் மௌனமாக நின்றான். அமிர்தலிங்கமய்யர் மீண்டும் கேட்டார். ‘‘ஏன் பாக்கணும்?’’
‘‘சொல்லத் தெரியல. ஒண்ணு மட்டும் தோணுது. உங்க மகன் பைத்தியமில்லை. ஊர் சொல்ற மாதிரி. துர்தேவதை வழிபாடு செஞ்சு மனநிலை தவறியவர் மாதிரியுமில்லை ஒண்ணு மட்டும் தெரியுது அவருக்குள்ள ஏதோவொண்ணு நடந்திட்டிருக்கு திரிபட்டாசா என்னவோ சீறிக்கிட்டு இருக்கு அது சீறி உச்சத்துக்குப் போகும்போதெல்லாம்.

அதை சமநிலைப்படுத்தவே. அவரு பித்தா. பைத்தியமா, மாறுகிறாரோன்னு தோணுது அவர் வேறரகம் அவர்கொண்ட நிலை. வேறுஉயர்வு இந்த திருக்கடையூர்ல இருக்கிற எல்லோரையும்விட. உங்க மகன் உசத்தி ஏன். உங்களையும்விட உசத்தி.’’

பெரியவர் அவனையே கூர்மையாக பார்த்தார். ‘‘அப்பனைப் போலவே, கேள்வியோடு நிற்காமல், அதற்குப்
பதிலையும் தேடுபவன் இவன்’’.
‘‘சரி. அதுக்கும் நீ அவன பாக்கணும்றதுக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘அவரிடம் கேட்க, எனக்கு சில கேள்விகள் உண்டு’’.
பெரியவர் காவிப்பற்கள் தெரிய  சிரித்தார். ‘‘என்ன உன் கேள்விகளப்பா?’’

குறிஞ்சிதேவன் செருமிக்கொண்டு பேசினான். ‘‘நாங்கள் கௌமாரக்குலம் வீரபாுகுவின் வழித்தோன்றல்கள் . ஆனால், ஏழு தலைமுறைகளாக அமிர்ந்தகடேஸ்வரர். எங்களின் வழிபாட்டுத்தெய்வம் சன்னிக்கு விளக்குப்பொருத்த வரும்போதெல்லாம். என்தந்தை அமிர்தகடேஸ்வரரை காட்டி ‘ஈரேழுலகத்தையும் ஆட்சிசெய்யும் அதிபதி இதோ’’ என்பார். ‘‘அமிர்தகடேஸ்வரரை நினைத்து. திருநீறிடாதவன் நெற்றி மட்டுமல்ல.

வாழ்வும் பாழ்’’ என சொல்லிச்சொல்லி வளர்த்தார் ஒருநாள் ‘வெறும் நட்டகல்போல் நிற்கின்ற இதுவா கடவுள் உண்மையில் எது கடவுள்?’ என்ற என் கேள்விக்கு, ‘‘நம் குலசாமியையா கல்லென்கிறாய்’’ என பளீரென்று கன்னத்தில் அறைத்தார் நான் ‘கடவுளில்லையென சொல்லவில்லை இதுவா கடவுளென கேட்கிறேன். என்றதற்கு மாறிமாறி அறைந்து. ‘‘அதெல்லாம் வேதமோதும் அந்தணர்கள் சங்கதி’’. என எச்சரித்தார்.

‘‘உண்மையில் என் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு அது புரியவுமில்லை. அதுதான் உண்மை. இன்று என்தந்தையில்லை. ஆனால், என்கேள்வி அப்படியேயிருக்கிறது. ‘‘இதுவா கடவுள்” என்பதை தாண்டி, ‘எது கடவுள்?’ என்பதில் போய் அது நிற்கிறது அதையும் கேள்வியாக்கி, சிலரிடம் கேட்டேனே. சிரித்தார்கள். சிலர் ‘‘கடும் நியதிகள் கடைபிடிப்பவர்க்கே கிட்டும்’’ என்றார்கள். ‘‘என்ன கடும் நியதி’’ என்றதற்கு. ‘‘அதெல்லாம் பெருஞ்சங்கதி குலப் பிறப்பிலேயே எழுதியிருக்கணும் என சீறினார்கள்.

‘‘ஒருவேளை அதுதான் உண்மையோ? நியதிகள் கொண்டவர்களுக்குத்தான் இறைவன் தரிசனமா? என்போன்ற எளியவர்களுக்கு கிட்டாதா? என்று யோசித்திருக்கும் போதுதான், உங்கள் மகனார் கோயிலில் சிலேடையாக சில சொற்கள் பேசினார். அந்த கணக்கில், நேர்மையாக, உண்மையாக, அவரே எனக்கு வழிகாட்ட முடியுமென தோன்றியது. பாதையறிந்தவரிடம் தானே, பயணத்திற்கு வழி கேட்கவேண்டும். எனவே தான் அவரை பார்க்க ஆசைப்படுகிறேன். நான் தவறெனில், பெரியவர் மன்னிக்கணும்’’ குறிஞ்சித்தேவன், விசும்பியபடி, கைகள் கூப்பினான்.

அமிர்தலிங்கமய்யர் அவன் பணிவிற்கு நெகிழ்ந்தார். ‘மலையாண்டியின் மகனே! உன்பெயரென்ன?’ ‘‘குறிஞ்சித்தேவன்’’. ‘‘குறிஞ்சித்தேவா, ஏனுனக்கு கடவுளை அறியவேண்டும்?’’ சட்டென்று குறிஞ்சித்தேவன் சொன்னான். ‘‘கண்டுணர்ந்து, நன்றி சொல்ல’’ ‘‘புரியவில்லை’’

‘‘நன்றி கூறுதல் நம் இயல்பு வாழ்க்கையில் எந்த உயிருக்கும். நன்றி கூறுவது நம் நற்பண்பு மனிதருக்கு மட்டுமல்ல, உழவுக்கு உதவுகிற கால்நடைக்கும், ஏன், உயிரற்ற ஏர்கலப்பை சாதனங்களுக்கும். போர் ஆயுதங்களுக்கும் கூட நன்றி கூறுகிறோம். எனக்கு நன்றி கூறவேண்டும் தெளிவான தகப்பனை, அன்பான தாயை, அக்கறையான உறவுகளை, நோயற்ற வாழ்வை. இதோ, தன்னையாய்ந்து பேசுகிற உங்களை போன்றோரை தந்த கடவுளை உணர்ந்து. நன்றி கூறவேண்டும்.

மனிதரெனில் கைகள்பற்றி நெகிழலாம். காலில் விழுந்து வணங்கி நன்றியெனலாம். ஆனால், இங்கு எதைப் பார்த்து, அல்லது யாரைப் பற்றி நெகிழ்வது? யாரிடம் நன்றி கூறுவது?‘‘

‘‘அப்போது கடவுளில்லை என்று மறுக்கிறாயா குறிஞ்சித்தேவா?’’இல்லாததொன்று, காலகாலத்திற்கும் இப்படி ஜீவித்திருக்காது எனக்கு கடவுள் உண்டென்பதில் மறுப்பில்லை எது கடவுள் என்பதில்தான் மறுப்பிருக்கிறது. சிலைபார்த்து பேசுவதில்தான் சிக்கலிருக்கிறது சிலையிலிருந்து பூச்சரிதலுமே, நீண்டு துடிக்கிற சுடரொளியுமே கடவுளின்பதில் என்பதுதான் அலுப்பையும், சோர்வையும் தருகிறது எல்லாம் தாண்டி. வேதமறிந்தவர்க்கும், நியதிகள் கடைப்பிடிப்பவர்க்கும் மட்டுமே இறைத்தரிசனம் வாய்க்கும் என்கிறபோதுதான் கோபம் வருகிறது அங்கேதான் ஒருவேளை இல்லையோ என்கிற சின்னதாய் ஒரு எண்ணம் எழுகிறது.

மூச்சு விடாமல் பேசிய குறிஞ்சித்தேவன். வேதனையோடு தலைகுனிந்து கொண்டான்.பெரியவர் கருணையோடு குறிஞ்சித்தேவனை நோக்கினார்.‘‘ஒவ்வொரு குலத்திலுமொருமாணிக்கம். ஒவ்வொரு நீர்நிலையிலும், உதிக்கும் சூரியனின் ஒரு பிம்பம் என்குளத்துச் சூரியனே உசத்தி, பொதுக்குட்டையில் தோன்றுவது மட்டமென்பது எத்தனை பெரிய முட்டாள்தான் கிழக்கிலுதித்தாலும், எத்திசைமனிதர்க்கும் சூரியன் பொது. கதிரவன் என்திசையில் மட்டுமே உதிக்கும் என்பதும் எத்தனை பெரிய மடத்தனம்.’’ யோசிப்பை நிறுத்தி, அமிர்தலிங்கமய்யர் பேசினார்.

‘‘குறிஞ்சித்தேவா. கவனமாய் நான் சொல்வதைக் கேள். இறையுணர்வு எவ்வுயிர்க்கும் பொது. அதற்கு ஐந்தறிவு. ஆற்றிவு, குலம், மதம், பேதம் கிடையாது கடவுளையுணர்ந்து, தன்னை வெளிக்காட்டாமல் அடங்கியவர்கள் இம்மண்ணின் எக்குலத்திலுமுண்டு. ‘‘கண்ணை நோண்டியபின்னும் உன் கடவுள் தெரிகிறாரா’’ என்று கேட்டதற்கு, ‘‘இப்போதுதான், மிகவும் பிரகாசமாக தெரிகிறார்’’ என்ற ஞானி, நம் மதத்தில் மட்டுமல்ல, வேற்று மதத்திலுமுண்டு. ஆக, கடவுள் எவராலும் காணமுடிபவர். இறைவன் எவர்க்கும் பொது.

அப்போது எது கடவுளை காட்டும்? உன்முயற்சியும், நம்பிக்கையும். வெறும் முயற்சி, நம்பிக்கையில்லை கடும்முயற்சி, பெரும்நம்பிக்கை. உண்மையில் கடவுள் தேடலென்பது. கடும்கானகத்தில் பாதை தேடும்முயற்சி அங்கு பால்வெளி வெளிச்சம் மட்டுமே துணை. ஆனால், ஒன்றைப் புரிந்துகொள் காலம் எல்லா ஏக்கத்தையும் தீர்க்கவல்லது. அது ஏங்குபவன் முழுமை அடையும்வரை பூங்கொத்தோடு காத்திருக்கிறது.

முழுமை அடையும்போது. தன்தோளில் அமரவைத்து, உலகுக்கு அவனை காட்டும். அதுவரை அவன் வேலை என்ன? முழுத்தகுதிக்காக விடாது முயல்வது. முடிவாய் ஒன்றை சொல்கிறேன். உன்கேள்வி களோடு நீ இரு காலம் ஒருநாள் உனக்கு கடவுள் காட்டும். போ. குறிஞ்சித்தேவா சுப்ரமண்யம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகிலோ அல்லது பிரம்மகுளத்துப் படிகளிலோ அமர்ந்திருப்பான்.

போ. அங்குபோய் பார்’’ என்றார்.குறிஞ்சித்தேவன் நன்றியுடன், நிறைவாய் கைகள் கூப்பினான். தெருவென்றும் பாராது. பெரியவரை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான். அமிர்தலிங்கமய்யர், பூக்கூடையிலிருந்து கைப்பிடி பவளமல்லியெடுத்து, அவன்மேல் தூவி ‘உன்னிலும் நிலவொளிப்பிரகாசம் ஒளிரட்டும்’’ என ஆசிர்வதித்தார்.

தொகுப்பு: குமரன்லோகபிரியா

The post நடுநெற்றிப் பௌர்ணமி-3 appeared first on Dinakaran.

Related Stories: