போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்

 

மதுரை, பிப். 19: போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம், தமிழ்நாட்டில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார். மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து போலீசாருக்கு ரோந்து பணிக்கான டூவீலர்களை டிஜிபி சங்கர் ஜிவால் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் தென்மண்டல போலீசாருக்கான மகிழ்ச்சி திட்ட குடும்ப நல மையம், போலீசாரின் விடுப்புக்கான சி.எல் செயலி ஆகியவற்றையும் துவக்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகிழ்ச்சி மைய மூத்த மனநல ஆலோசகர் ராமசுப்ரமணியன், தென் மண்டல ஐ.ஜி கண்ணன், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, காவலர் நலன் ஐஜி நஜ்முல் ஹோடா, நெல்லை கமிஷனர் மூர்த்தி, தென் மாவட்ட எஸ்.பிக்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

முன்னதாக மனநல ஆலோசனை பெற்று குணமடைந்த 3 போலீசார், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் பேசியதாவது: நூறு பேருக்கு நாம் மனநல ஆலோசனை சிகிச்சை அளித்தால் 10 பேர் சரியான நிலைக்கு வந்தாலும் இத்திட்டத்திற்கு வெற்றிதான். இத்திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இங்கு ஏற்படும் வெற்றியை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படலாம்.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதுடன் மேலும் 15 இடங்களில் விரிவுபடுத்தவுள்ளோம். இத்திட்டத்தின் துவக்க விழாவிற்கு முன்பாகவே, மதுரையில் 127 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மனநல பாதிப்பு வெளியே தெரியாது. பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தால் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெற முன்வர வேண்டும். இத்திட்டம் அடுத்தகட்டமாக திருவாரூரில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு பேசினார்.

The post போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: