அரசு பள்ளியில் 100வது ஆண்டு விழா

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, மலரோசாபுரம், சின்ன காலனி, வலம்புரி நகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் நல்லம்பாக்கம் கிராமத்தில் கடந்த 1924ம் ஆண்டு ஆரம்பப்பள்ளி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு அரசு நடுநிலை பள்ளியின் சார்பில் 100ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்தோஷ்ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம் இளங்கோவன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஹேமாலினி வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான லட்சுமணன் கலந்துகொண்டு 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் பள்ளியின் சுவற்றில் பதிக்கப்பட்ட 100ம் ஆண்டு கல்வெட்டினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், துணை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post அரசு பள்ளியில் 100வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: