புழுதிவாக்கத்தில் பள்ளம் தோண்டும்போது குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்: அதிகாரிகள் உடனடியாக சீரமைத்தனர்

ஆலந்தூர்: புழுதிவாக்கத்தில் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டும்போது, அங்குள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து குடிநீர் குபுகுபுவென வெளியேறி சாலைகளில் ஆறாக ஓடியது. இதுகுறித்து தகவலறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து, அங்கு குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சீரமைத்தனர். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம், கண்ணகி நகரில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்குள்ள சாலை சந்திப்பில் உள்ள சிறுபாலத்தின்கீழ் நேற்று மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அருள்மொழி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பிற நகர் பகுதிகளுக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அக்குழாயிலிருந்து குடிநீர் குபுகுபுவென பீய்ச்சியடித்தபடி வெளியேறி, அப்பகுதி சாலைகளில் ஆறாக வெள்ளம் போல் ஓடியது.இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை பெருநகர குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

அங்கு குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சீரமைத்தனர். இந்த குழாய் உடைப்பு காரணமாக புழுதிவாக்கம், மணிமேகலை தெரு, கண்ணகி தெரு, ஆயிரம் தெரு, தரன் தெரு, சர்ச் தெரு, ஓட்டேரி சாலை, கலைமகள் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபட்டது. பின்னர் நேற்று மாலை உடைப்பு சரிசெய்யப்பட்ட பிறகு, இப்பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post புழுதிவாக்கத்தில் பள்ளம் தோண்டும்போது குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்: அதிகாரிகள் உடனடியாக சீரமைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: