டெல்லி சலோ போராட்டத்தில் பஞ்சாபை சேர்ந்த 65 வயது விவசாயி கியான் சிங் மாரடைப்பால் உயிரிழப்பு!!

புதுடெல்லி: அரியானா மாநிலம், அம்பாலா அருகே ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிள் ஒருவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கத்தினர் பஞ்சாப் மற்றும் அரியானாவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் பேரணியை கடந்த 13ம் தேதி தொடங்கினர். அவர்கள், டிராக்டர் மற்றும் டிராலிகளில் 6 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களுடன் புறப்பட்டனர். இவர்களை டெல்லி நகருக்குள் நுழைய விடாமல் தடுக்க அரியானா எல்லையில் பாதுகாப்பு படையினர் தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை அமைத்தனர். இதனால் பஞ்சாப்-அரியானாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் ஒன்று திரண்டனர். போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ட்ரோன்மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைக்க அரியானா போலீசார் முயன்று வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் கடந்த 3 நாள்களாக ஷம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை முதல் நெஞ்சுவலி ஏற்பட்டது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச, அதிலிருந்து வெளியான புகையை சுவாசித்த கியான் சிங் அசௌகரியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கியான் சிங், இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பு எல்லைக்கு வந்து விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணியில் பங்கேற்றார். தங்களுடன் போராட்டக்களத்தில் இருந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் மற்ற விவசாயிகளிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post டெல்லி சலோ போராட்டத்தில் பஞ்சாபை சேர்ந்த 65 வயது விவசாயி கியான் சிங் மாரடைப்பால் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: