மாஜி முதல்வரின் உதவியாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது

நாமகிரிப்பேட்டை, பிப்.14: நாமகிரிப்பேட்டை அருகே மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ்(32). இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நாரைக்கிணறு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில், அவரது மனைவி அருள்பிரியா(30), தந்தை செல்வகுமார்(60), தாய் விஜயலட்சுமி(55) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு 2 கார்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், அருண்பிரகாஷின் தோட்டத்து வீட்டிற்கு வந்தனர். கொள்ளையடிக்கும் முயற்சிக்காக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டு கடப்பாரை, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் செல்ல முயன்றனர்.

சத்தம் கேட்டு அருள்பிரியா கூச்சலிட்டார். இதையடுத்து, கொள்ளைடிக்க வந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆயில்பட்டி போலீசார் விசாரித்தனர். ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் ராசிபுரம் அடுத்த ஏடிசி டிப்போ அருகே சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே, அங்கு சென்ற போலீசார் வாகனத்தை ஆய்வு செய்தபோது, அருண்பிரகாஷின் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த போது சிசிடிவி கேமராவில் பதிவான கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை சுற்றிவளைத்த போலீசார், காரில் இருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர்.

இதையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(31), சுயம்புலிங்கம்(25), பார்வதிமுத்து(25), ஜெயக்குமார்(24) மற்றும் டிரைவர் முருகானந்தம்(48) என்பதும், கூட்டாக சேர்ந்து முதன்முறையாக கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ேபாலீசார், சிறையிலடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை போலீசார் தேடி
வருகின்றனர்.

The post மாஜி முதல்வரின் உதவியாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: