பிப்ரவரி 13: உலக வானொலி தினம்

சென்னை: தலைமுறைகளைக் கடந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து பொக்கிஷமாக வானொலி திகழ்கிறது. அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான இன்று உலக வானொலி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த 21ம் நூற்றாண்டில் உலகமே நம் கைக்குள் வந்துவிட்டது. நாம் விரும்பிய செய்தி அல்லது மனநிலைக்கு ஏற்றப் பாடல்களை சில வினாடிகளில் கேட்டு விடுகிறோம். ஆனால் காத்திருந்து ஒன்றைப் பெறுவதில் சந்தோஷம் 80 மற்றும் 90ஐ சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் புரியும். அதில் ஒன்றுதான் வானொலி.

செய்தி தாள்களுக்குப் பிறகு மக்களை இசை மற்றும் செய்திகளால் ஒன்றிணைத்தது வானொலிதான். இன்னும் பலரது மனதை கொள்ளைகொள்வது வானொலி என்றால் அதை மறுக்க முடியாது. மின்சாரம் கூட இல்லாத இடங்களில் தற்போது வரை நேயர்களை அரவணைத்துச் செல்லும் வானொலிக்கான சிறப்பை உணர்த்தும் உலக வானொலி தினம் இன்று. இந்தியாவின் அதிகப்படியான கிராமங்களில் இன்றளவும் வானொலியை பயன்படுத்திதான் அன்றாட தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.

வானொலியின் வரலாறு: தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது. வானொலியின் தந்தை என அழைக்கப்படுபவர் இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி. இவரால் 1888-ல் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி தொழில்நுட்பம், 1901-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் 1927-ல் மும்பை, மற்றும் கொல்கத்தாவில் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1936-ல் ஒன்றிய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ், நிறுவப்பட்டு பின்னர் தன்னாட்சி வழங்கப்பட்ட பிரசார் பாரதி அங்கமாக மாறியது. ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட 16 அயல்நாட்டு மொழிகளிலும், 24 இந்திய மொழிகளிலும் 208 ஒலிபரப்பு நிலையங்களோடு அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ஐ உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது. 1946-ல் ஐ.நா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இரவுகளை மென்மையாக்கும் எஃப்.எம்.கள்: வானொலிகளின் மதிப்பு தற்போது தமிழகத்தில் பல்வேறு வானொலிகள் ஆங்காங்கே முளைத்து கிடந்தாலும் “ஆல் இந்தியா ரேடியோ மாநிலச் செய்திகள் வாசிப்பவர் சரோஜினி” என்ற வார்த்தை 1980களில் மிகவும் பிரபலம். தற்போது கோடை பண்பலை, எஃப்எம் ரெய்ன்போ, உள்ளிட்ட அரசு வானொலிகளும், தனியார் வானொலிகளும் பெருகுவதால் அவற்றிற்கான மதிப்பு இன்றளவும் அப்படியே இருக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு வெயிலிலும் மழையிலும், போக்குவரத்து நெரிசலிலும் அவர்கள் களைப்பு தெரியாமல் வேலை பார்ப்பதற்கு இன்றும் எஃப்எம் கேட்டுக்கொண்டுதான் செல்கிறார்கள். குறிப்பாக பெரும் தொழிற்சாலைகளில் கூட வானொலிகளை ஒலிக்கச் செய்து தொழிலாளர்களின் வேலை களைப்பை போக்கி வருகின்றன.

தற்போது இரைச்சலான வானொலிகள் அதிகமாகி விட்ட போதும் இரவு நேரங்களில் மனதைத் தாலாட்டும் இளையராஜாவின் பாடல்களை வானொலியில் கேட்டு விட்டு உறங்கச் செல்வது இன்னும் பலருக்கு வாடிக்கையான ஒன்று. அதனால்தான் பகலில் கத்தி சத்தம் போடும் எப்.எம்.கள் கூட இரவு நேரங்களில் இளையராஜாவுக்கு என்றே தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி பாடல்களை ஒலிபரப்பி வருகின்றன. உடல் களைத்து மனம் உறங்கச் செல்லும் இரவு நேரங்களில் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடலைக் கேட்கும் போது வரும் உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் என ஜேசுதாஸின் நெஞ்சை உருக செய்யும் குரலைக் கேட்டு விட்டு உறங்க சென்றால் அந்த இரவு இனிமையான இரவு தான். அதன்பிறகு புதுவிதாமான இசையுடன் காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே என அனைவரையும் துள்ளல் இசையுடன் மகிழ்வித்தது ஏ.ஆர். ரஹ்மானின் இசை. அந்தப் பாடல்களுக்காகவே அப்போதைய இளசுகள் மணிக்கணக்காக வானொலி முன்பு காத்திருந்தனர். அதேபோல் ஜி.ராமநாதன், எம்.எஸ்.வி பாடல்கள் என்றால் 80களை சேர்ந்தவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. இன்னும் பல பெருமைகளை வானொலி குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போது உள்ள 2கே கிட்ஸ்களுக்கு வானொலி குறித்து அவ்வளவாக தெரியாத நிலையில், அவர்களின் தந்தையிடமும் அல்லது தாத்தாவிடமும் போய் கேட்டால் அவர்கள் அடுக்குவார்கள் ஆயிரக்கணக்கில் வானொலியின் பெருமைகளை. ஏனெனில் நேயர்களின் விருப்ப பாடல்களுக்காக காத்திருந்து, இணைப்புகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்ததும் அவர்கள்தான். அதேநேரத்தில் நாம் எதிர்பார்த்த பாடல்கள் மற்றொருவர் கேட்டு ஒலிபரப்பும் போது அதனை கேட்டு அலாதி இன்பம் அடைந்ததும் அவர்கள்தான். இந்தியா- பாகிஸ்தான் போர் தொடங்கி, தற்போதைய மன் கி பாத் வரை வானொலியின் முக்கியத்துவத்தை அரசுகளும் உணர்ந்துதான் உள்ளன.

The post பிப்ரவரி 13: உலக வானொலி தினம் appeared first on Dinakaran.

Related Stories: