கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை: 7 பேர் நாடு திரும்பினர்

புதுடெல்லி: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் நாடு திரும்பினர். கத்தார் நாட்டின் தோகாவில் அல் தாரா குளோபல் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய கடற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் மீது உளவு பார்த்ததாக கடந்த 2022, மார்ச் 25ம் தேதி கத்தார் போலீசார் குற்றம்சாட்டு பதிவு செய்தனர். இவர்கள் இஸ்ரேலுக்காக, கத்தாரின் நீர் மூழ்கிக் கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை கத்தார், இந்திய அரசுகள் உறுதிபடுத்தவில்லை.

2022 ஆகஸ்ட் மாதம் 8 பேரும் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கை விசாரித்த கத்தார் முதன்மை நீதிமன்றம், கைதான 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் தீர்ப்பளித்தது. இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி துபாயில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 28ம் தேதி 8 இந்தியர்களின் மரண தண்டனை குறைக்கப்பட்டு, 3 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 60 நாள் அவகாசம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களையும் கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது குறைத்து சிறையில் அடைக்கப்பட்ட 46 நாட்களுக்குப் பிறகு 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளையும் கத்தார் அரசு விடுவித்துள்ளது. இதில், 7 வீரர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர். தோகாவில் தங்கி உள்ள கமாண்டர் திவாரியும் விரைவில் நாடு திரும்புவார்’ என கூறப்பட்டுள்ளது.

* காங்., பாஜ வரவேற்பு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டதில் ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியில் காங்கிரசும் இணைந்து கொள்கிறது. வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்’ என்றார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான சசி தரூர், ‘கத்தாரில் 8 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியது மிகப்பெரிய நிம்மதி. அவர்களின் விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்றார். பாஜ செய்தித் தொடர்பாளர் ஷாசியா இல்மி கூறுகையில், ‘‘இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு பெரிய செய்தி. இந்தியாவிற்கு கிடைத்த பெரிய ராஜதந்திர வெற்றி. இந்தியா எந்தளவுக்கு நன்றாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது என்பதை காட்டுகிறது’’ என்றார்.

* கத்தார் செல்கிறார் மோடி
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரசு அமீரகத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி நாளை (14ம் தேதி) கத்தாரின் தோகாவுக்கும் செல்ல இருப்பதாக வெளியுறவு செயலாளர் வினய் கவத்ரா நேற்று கூறி உள்ளார். முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்படுவதாக கத்தார் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்நாட்டிற்கு திடீர் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

The post கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை: 7 பேர் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: