சதுரங்கப்பட்டினம் மீனவ பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர கோரிக்கை

 

திருக்கழுக்குன்றம், பிப்.12: சதுரங்கப்பட்டினம் மீனவ பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட மீனவ பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இதில், அப்பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்கள் சில தினங்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட இந்த புயல் பாதுகாப்பு மையத்தில், அங்கன்வாடி குழந்தைகள் தங்குவதற்கான போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்ற
னர். இதனால், இந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சதுரங்கப்பட்டினம் மீனவ பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: