பிறவியிலேயே நடக்க முடியாத சிறுவன் துள்ளி குதிக்க போறான்: ரங்கம் மருத்துவர்கள் சாதனை

திருச்சி: லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட ஆண்ரோட் தீவில் வசித்து வருபவர் செரியகோயா (48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஹாபி ஷா (42). இவர்களது இரண்டாவது மகன் முகம்மது துல்கர் (11). ஹாபி ஷா கருவுற்றிருந்த போது குறை பிரசவத்தில் 7 மாதத்தில் 700 கிராம் எடையில் குழந்தை பிறந்தது. தற்போது 11 வயதாகிறது. பிறக்கும்போதே இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு பின்னர் நடக்க முடியாமல் சிரமப்பட்டு இருந்த சிறுவனுக்கு கேரளாவில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அதற்கான உரிய பலனளிக்க வில்லை. இதனால் சிறுவனால் நிற்கவோ, நடக்கவோ முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் முசிறி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான்விஸ்வநாத்திடம் சிறுவனை அழைத்து வந்து பெற்றோர் காட்டி உள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர், 3 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவர் ஜான் விஸ்வநாத், ரங்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றுபணியில் சென்றதால் சிறுவனை ரங்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து பரிசோதித்து பார்த்தார்.

இதில் துல்கருக்கு மூட்டு இறுக்கம், பெருமூளை வாதம் தொடர்பான ஸ்பாஸ்டிக் பாராப்லீஜியா என்கிற பிறவி ஊனத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து முகம்மது துல்கருக்கு, டிச 28, ஜன 31 மற்றும் பிப் 6 ஆகிய மூன்று நாட்கள் மருத்துவர் ஜான் விஸ்வநாத் தலைமையிலான சிறப்பு அறுவை சிகிச்சை குழுவினர் தொடர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். இதுகுறித்து மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறுகையில், ‘இந்த தொடர் நவீன அறுவை சிகிச்சைகள் என்பது தசைநார் பரிமாற்றம், தசை சமநிலை மற்றும் மறுசீரமைப்பு முன்பாத மறுஅமைப்பு செயல்முறைகளை உள்ளடக்கியது. இத்தகைய நூதன நவீன அறுவை சிகிச்சைகள் எய்ம்ஸ், வேலூர் போன்ற நவீன உயர் மேற் சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனைகளில்தான் செய்யப்பட முடியும். அதுவும் அதற்கு பல லட்ச ரூபாய்கள் செலவாகும் என்ற நிலையில் இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. தையல் பிரித்த பின் தொடர் இயல்முறை பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் சிறுவன் விரைவில் எழுந்து நடக்க ஆரம்பித்ததும் லட்ச தீவிற்கு அனுப்பி வைப்போம்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

 

The post பிறவியிலேயே நடக்க முடியாத சிறுவன் துள்ளி குதிக்க போறான்: ரங்கம் மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: