ராயபுரம், அடையாறு ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சி மற்றும் உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட மருதம் காலனியில் உள்ள பொது இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேங்கியிருந்த குப்பை மற்றும் மரக்கழிவுகளை அகற்றும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இன்று (08.02.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் அவர்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தவிர்த்திடவும், வீடுகள்தோறும் சென்று சேகரிக்கப்படும் குப்பை சேகரித்தல் பணியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கிடவும், டியூப் லைட், பாட்டில்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களை பொது இடங்களில் வீசுவதைத் தவிர்க்கவும், குப்பைகளை போடுவதற்கு குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்திடவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில் தொடர்புடைய அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இராயபுரம் மண்டலம், வார்டு-60க்குட்பட்ட அன்னை சத்யா நகர் குடியிருப்புப் பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கலந்துரையாடினார்.

பின்னர், யானை கவுனி மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணியினை மாநகராட்சி மற்றும் இரயில்வே துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பிப்ரவரி 2024க்குள் ஒருவழிப்பாதைப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் பி.ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் ஜெயின், இசட். ஆசாத், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post ராயபுரம், அடையாறு ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Related Stories: