நாடாளுமன்ற தேர்தல் முறையாக நடைபெறுமா?: முத்தரசன் சந்தேகம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, மாநிலத்திற்கு தேவையான நிதியை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து நேற்று கர்நாடகா மாநிலம் சார்பிலும், இன்று கேரள மாநிலம் சார்பிலும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. மாநில உரிமையை காப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. மாநில முதலமைச்சர்கள் நேரடியாக டெல்லிக்கு சென்று போராட வேண்டிய நிலை எந்த காலத்திலும் ஏற்பட்டது இல்லை. பாரபட்சமான முறையில் ஒன்றிய அரசு செயல்படுவது நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல.

நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் அதிகாரிகளை வைத்து முடிவுகளை மாற்றி பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுக்கும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் நப்பாசை வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தல் முறையாக நடைபெறுமா?: முத்தரசன் சந்தேகம் appeared first on Dinakaran.

Related Stories: