பட்டாபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பை

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் சார்பில் பட்டாபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில், சென்னை எம்.ஒய்.சி முகப்பேர் அணி முதலிடத்தையும், பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகளில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டிகள் நாக் அவுட் முறையில் கால் இறுதி, அரை இறுதி என நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அணி வெற்றி பெற கடுமையாக விளையாடினர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற எம்.ஒய்.சி முகப்பேர் அணியும் – பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணியும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்ஒய்சி முகப்பேர் அணி எதிரணியினரை ஒரு கட்டத்தில் புள்ளிகள் பெற விடாமல் தடுத்து 23க்கு 11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூடியது. கபடி போட்டியில் முதலிடம் பிடித்த எம்ஒய்சி முகப்பேர் அணிக்கு ரூ.15,000 ரொக்கப் பரிசு மற்றும் 6 அடி உயர கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணிக்கு ரூ. 10,000 மற்றும் 5 அடி கோப்பையும் வழங்கப்பட்டது. இதில் பட்டாபிராமில் அமைந்துள்ள ஆவடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 4ம் பரிசினை தட்டிச் சென்றது.

The post பட்டாபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பை appeared first on Dinakaran.

Related Stories: