பனையஞ்சேரி கிராமத்தில் புதர்மண்டி கிடக்கும் கழிவறை கட்டிடம்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பனையஞ்சேரி கிராமத்தில் கழிவறை கட்டிடம் சுற்றிலும் புதர்மண்டி காணப்படுவதால், இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், பனையஞ்சேரி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள காலனி பகுதியில் அப்பகுதி மக்களின் வசதிக்காக கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த, கழிப்பறை கட்டிடம் திறந்து சில மாதங்கள் மட்டுமே இயங்கியது. அதன்பிறகு தண்ணீர் வசதி இல்லாமல் இதை யாரும் பயன்படுத்தவில்லை. இதனால், இந்த கழிப்பறை கட்டிடத்தை சுற்றி புதர்கள் மண்டி பயன்படுத்தாத நிலையில் உள்ளது. எனவே, புதர்மண்டி காணப்படும் கழிவறை கட்டிடத்தினை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பயன்படுத்த முடியாமல்போன இந்த கழிவறை கட்டித்தை சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாட்டம் ஆடுவது போன்றவைகளுக்காக பயன்படுத்தினர். பின்னர், நாளடைவில் இக்கழிவறை கட்டிடம் செடிகொடிகள் படர்ந்து புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. இந்த, கழிப்பறையில் தற்போது பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் போன்றவை குடிகொண்டுள்ளதால், இப்பகுதி மக்கள் இயற்கை உபாதைக்கு வெட்ட வெளியைதான் பயன்படுத்துகிறார்கள். இதனால், பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பனையஞ்சேரி கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என கூறினர்.

The post பனையஞ்சேரி கிராமத்தில் புதர்மண்டி கிடக்கும் கழிவறை கட்டிடம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: