கேரளா அரசு முரண்டு பிடிப்பதால் சிறுவாணி குடிநீருக்கு ஆபத்து?

*மாநகராட்சி கூட்டத்தில் பகீர்

கோவை : கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் விக்டோரியா அரங்கில் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர் விநியோகம், தார்ச்சாலை, தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், மாநகராட்சி பள்ளி மேம்பாடு, மாநகராட்சி வணிக வளாகம் பராமரிப்பு உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்பாக மொத்தம் 109 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதில், 108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது மற்றும் உரிமம் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான ஒரே ஒரு தீர்மானம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், 72-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் (திமுக) பேசுகையில், ‘‘கோவை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் சிறுவாணி குடிநீருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து சிறுவாணி குடிநீர் எடுக்கக்கூடாது என கேரளா அரசு அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி மாநகராட்சி சார்பில் ெபாதுமக்களுக்கு தெளிவான விளக்க அறிக்கை வழங்க வேண்டும்’’ என்றார்.

இதே கோரிக்கையை 44-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி (காங்.) முன்மொழிந்தார். அவர் பேசுகையில், ‘‘எனது வார்டு முழுவதும் சிறுவாணி குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திட்டம் எதுவும் இந்த வார்டில் இல்லை. எனவே, எவ்வித இடையூறும் இன்றி வார்டு மக்களுக்கு சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்’’ என்றார்.
98-வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் (திமுக) பேசுகையில், ‘‘சிறுவாணி குடிநீர் விநியோகம் தொடர்பாக இந்த மாமன்றத்தில், கேரளா அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்’’ என்றார். இவரது கோரிக்கையை பெரும்பாலான கவுன்சிலர்கள் ஏற்று, முன்மொழிந்தனர்.

மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசுகையில், ‘‘இது, இரு மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். இதில், கோவை மாநகராட்சி மட்டும் தன்னிச்சையாக திடீரென முடிவு எடுக்க முடியாது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிடமும், மாவட்ட பொறுப்பு அமைச்சரிடமும் கலந்துபேசி அதன்பிறகு முடிவு எடுப்பதே சிறந்ததாக இருக்கும். அதேசமயம், கோவை மக்களுக்கு தடையின்றி சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள், கேரளா மாநில அரசின் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சிறுவாணி அணை பராமரிப்பு ஒப்பந்தம், குடிநீர் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் என பல்வேறு விஷயங்கள் குறித்து, இரு மாநில அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கு, மிக விரைவில் தீர்வு காணப்படும். அதேசமயம், பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டதால், அதன் சோதனை ஓட்டம் மிக விரைவில் நடத்தப்படும். மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு (திமுக) பேசுகையில், ‘‘மாநகர் முழுவதும் தெருநாய் பெருக்கம் அதிகரித்துவிட்டது. இவற்றால், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவற்றை பிடித்து கருத்தடை ஆபரேசன் செய்யும் நடடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்த பணியில் வெளிப்படை தன்மை இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் பொய்யான தகவலை வெளியிடுகிறார்கள்.

வார்டுக்குள் புகுந்து 10 தெருநாய்களை பிடித்துவிட்டு, 100 தெருநாய்களை பிடித்துவிட்டோம் என ெபாய் கணக்கு காட்டுகிறார்கள். தெருநாய் பிடிக்க வரும்போது, வார்டு கவுன்சிலருக்கு தெரிவிப்பது இல்லை. வார்டு கவுன்சிலர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (திமுக) பேசுகையில், இதே கோரிக்கையை முன்மொழிந்தார். 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு என்கிற செல்வகுமார் பேசுகையில், ‘‘வளர்ச்சி பணிகள் தொடர்பாக வார்டுகளுக்கு நிதி ஒதுக்கும்போது பாரபட்சம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு மண்டலத்துக்கு மிக குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சூயஸ் குடிநீர் திட்டப்பணிகளில் இந்த பாரபட்சம் வெளிப்படையாக தெரிகிறது. அத்துடன், குப்பை அகற்றும் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் முறையாக குப்பை அகற்றுவது இல்லை. எனது வார்டில் வீதியெங்கும் குப்பை குவிந்து கிடக்கிறது. எனவே, தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் மாநகராட்சி மூலமாகவே குப்பையை அகற்ற வேண்டும்’’ என்றார். இதே கோரிக்கையை 5-வது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் (காங்) பேசுகையில் முன்மொழிந்தார்.

மாமன்ற ஆளும்கட்சி தலைவரும், 100-வது வார்டு கவுன்சிலருமான கார்த்திகேயன் (திமுக) பேசுகையில், ‘‘வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து கடந்த 3 நாட்களாக கடுமையான துர்நாற்றம் வெளிவருகிறது. இதனால், சுற்றுவட்டார மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வுசெய்து, துர்நாற்றம் வீசுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடையை மீறி, மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதே கோரிக்கையை 98-வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் (திமுக) முன்மொழிந்தார்.

71-வது வார்டு கவுன்சிலர் அழகு ஜெயபாலன் (காங்.) பேசுகையில், ‘‘மாநகரில் 45 சதவீதம் பசுமை குறைந்துவிட்டது. இதனால் வெப்பம் அதிகரிக்கிறது. எனவே, மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் 1,200க்கும் மேற்பட்ட ரிசர்வ் சைட்களை மீட்டு, சிறு பூங்கா அமைக்க வேண்டும். இதை செய்தால், மாநகரில் மீண்டும் பசுமை திரும்பும். கோடை காலம் நெருங்கி வருவதால், சிறுவாணிக்கு மாற்றாக, பில்லூர் குடிநீர் வாரம் ஒருநாள் விநியோகம் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாக்கிங் செல்வோர் வசதிக்காக மொபைல் டாய்லெட் அமைக்க வேண்டும். மாநகரில் குப்பை அகற்றும் பணி தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இவர்கள், முறையாக குப்பை அகற்றுவது இல்லை. எனவே, இதை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் மாநகராட்சி வசமே இப்பணியை ஒப்படைக்க வேண்டும்’’ என்றார்.

அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரியை ரத்து செய்யக்கோரி, அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகியோர் நேற்று மாமன்ற கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கூட்ட அரங்கின் முன்புறம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் குப்பை கூடைகளையும் எடுத்து வந்திருந்தனர். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும், குப்பை அகற்றும் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளதை ரத்துசெய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

டைரி விநியோகம்

மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி சார்பில் அச்சிடப்பட்ட டைரி விநியோகம் செய்யப்பட்டது. இதில், மாநகராட்சி எம்பளம் மற்றும் வார்டு எண், வார்டு கவுன்சிலர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த டைரியின் முகப்பு தோற்றம் பிரத்யேகமாக காணப்பட்டது.

The post கேரளா அரசு முரண்டு பிடிப்பதால் சிறுவாணி குடிநீருக்கு ஆபத்து? appeared first on Dinakaran.

Related Stories: