சத்தியமங்கலம்: திம்பம்-தலமலை வனச்சாலையில் சாலையோரத்தில் நின்ற காட்டு யானைகளை பார்த்து பஸ் பயணிகள் அச்சமடைந்தனர். அவர்கள் ‘கணேசா வழிவிடு’ என கெஞ்சிய வீடியோ வைரலாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. ராமரணை பிரிவு அருகே சென்றபோது வனப்பகுதியில் 2 காட்டு யானைகள், ஒரு குட்டி யானை என மொத்தம் 3 யானைகள் சாலையோரத்துக்கு வந்தன.
புற்களை பறித்து உட்கொண்டபடி சாலையோரம் நின்ற அந்த யானைகளை பார்த்ததும் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் யானைகளை பார்த்து அச்சம் அடைந்தனர். பஸ்சில் இருந்த சில பயணிகள் காட்டு யானைகளை செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பஸ்சை இயக்கினார் யானைகள் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் சில பயணிகள், ‘கணேசா வழிவிடு… கணேசா வழி விடு…’’ என கெஞ்சியபடி யானைகளிடம் முறையிட்டனர். சிறிது நேரம் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
The post திம்பம்-தலமலை வனச்சாலையில் சாலையோரம் நின்ற காட்டு யானைகள்: ‘கணேசா வழிவிடு…’ என கெஞ்சிய பஸ் பயணிகள் appeared first on Dinakaran.