இந்து அல்லாதவர்கள், இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு

மதுரை: இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ம் ஆண்டில் இயற்றிய சட்டத்தில், இந்து அல்லாத எந்தவொரு சமயத்தினரும், இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் அதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்க வேண்டும். பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார்.

The post இந்து அல்லாதவர்கள், இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: