இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய ஆய்வை மேற்கொள்கிறது. இந்த ஆய்வின் மூலம் பெறப்படவுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் பொது இடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் களமிறங்கியுள்ளது. அந்தவகையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை சிறந்ததாக்க பல்வேறு துறைகளுக்கு பரிந்துரைகளை வழங்கும் சான்று அடிப்படையிலான ஆய்வை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையிலான சென்னை நகர கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, நிர்பயா நிதியின் கீழ், 2022 பிப்ரவரியில் கிரேட்டர் சென்னை மாநகராட்சி மூலம் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட ‘பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பார்வை தொடர்பான அணுகல் மற்றும் பாதுகாப்பு’ என்ற அடிப்படை ஆய்வில், சென்னையில் கணக்கெடுக்கப்பட்ட 62% பெண்கள், துன்புறுத்தலை எதிர்கொள்ளும் போது யாரும் தலையிடவில்லை என்று கூறியுள்ளனர்.
பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய ஆய்வானது, பெண் பயணிகளின் சுயவிவரம் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய மிக உயர்ந்த பாதுகாப்பு விஷயங்கள் போன்ற அம்சங்களை ஆராயும். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள விளக்குகளை மேம்படுத்துதல், குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களுக்கு வசதியான இருக்கைகளை உருவாக்குதல், பேருந்து நிலையங்களில் போதுமான அளவிற்கு பொது கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் பெண் பயணிகள் தங்கள் பயண இடத்தை அடையும் வரை பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை இவற்றில் அடங்கும். இந்த ஆய்வானது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 500 பேருந்து நிறுத்தங்கள், 10 வழித்தடங்கள், உள்ளூர் ரயில் நிலையங்களில் நடத்தப்படவுள்ளன என்றார்.
அவசர உதவி எண்கள்
அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக ரோந்து வாகனம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பெண்களுக்கான இந்த பிரத்யேக உதவியைப் பெறுவதற்கு, 112, 1091 ஆகிய கட்டணமற்ற எண்களை தொடர்புகொள்ளலாம். இது தவிர 044-23452365, 044- 28447701 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
விடுதி, ஒப்பனை அறை
சென்னை மாநகராட்சி சார்பில் நிர்பயா திட்ட நிதியின் கீழ் ரூ.4.37 கோடியில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், கைகழுவும் திரவம், உடை மாற்றும் சிறிய அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. வெளியூர்களில் இருந்து பணிக்காக சென்னை வரும் பெண்களுக்கு ‘தோழி’ எனும் மகளிர் தங்கும் விடுதி வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post பெண்கள், சிறுமிகளுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த புதிய ஆய்வு தொடங்கும் சென்னை மாநகராட்சி: தரவுகளின் அடிப்படையில் செயல்திட்டம் உருவாகும் appeared first on Dinakaran.