தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகளை சார் ஆட்சியர் ஆய்வு: அதிகாரிகளுடன் ஆலோசனை

 

மாமல்லபுரம், ஜன.26: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து சார் ஆட்சியர் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆளவந்தார் அறக்கட்டளை அலுவலகத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் நாராயண சர்மா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அடையார், திருவான்மியூர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்குவது, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மொபைல் டாய்லெட், குடிநீர் வசதி, அலங்கார மின் விளக்குகளுக்காக கூடுதல் மின்சாரம் கொண்டு வருவது, சாலைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது, நகரம் முழுவதும் டிரோன் கேமரா பறக்க விட்டு கண்காணிப்பது,

பொதுப் பணித் துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்கு கோயிலில் சாரம் கட்டுவது, விஐபி மற்றும் விவிஐபிக்களை எந்த வழியாக அழைத்து வருவது, திருடர்களை கண்காணிக்க தற்காலிக சிசிடிவி கேமரா பொருத்துவது, போதிய அளவில் போலீசாரை பணியமர்த்தி பாதுகாப்பு கொடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், கோயில் (பொ) செயல் அலுவலர் சக்திவேல், வருவாய்த்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பட்டாச்சாரியார்கள் பலர் உடனிருந்தனர்.

The post தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகளை சார் ஆட்சியர் ஆய்வு: அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: