குடவாசல் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பில் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

*இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் குடவாசல் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான புன்செய் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து அறநிலைய துறையினர் மீட்டனர்.தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுபொறுப்பேற்ற பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு மேற்பார்வையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு மற்றும் குத்தகை பாக்கி கொண்ட நிலங்கள், மனைகள் மற்றும் கட்டிடங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.இதுமட்டுமின்றி சர்வேயர்களை கொண்டு அறநிலைய துறையின் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் நீண்ட நாட்களாகவே அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் என இதுநாள் வரை தெரியாமலேயே இருந்து வரும் நிலங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இதுவரையில் ₹4 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான இடங்கள் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் அறநிலைய துறையின் நாகை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராணி ஆகியோர் உத்தரவின் பேரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் மனைகள் அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் வரையில் ₹40 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடவாசல் தாலுக்கா திருப்பாம்புரத்தில் ராகு, கேதுவிற்கு பெயர் பெற்ற சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புடைய 7 ஏக்கர் 14 செண்ட் புன்செய் நிலத்தினை கம்பூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இணை ஆணையர் குமரேசன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், தக்கார் முருகன், ஆய்வாளர் ராஜ்திலக், தாசில்தார் லெட்சுமிபிரபா மற்றும் ஊழியர்கள் மூலம் மீட்கப்பட்டு அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைக்கப்பட்டது.

The post குடவாசல் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பில் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: