டேக் டைவர்சன்..! 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடக்கம்

சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக ராதாகிருஷ்ணன் சாலை – ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு (நீலம், பச்சை) வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது.

இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இந்த திட்டம் 2026ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில், ஊதா வழித்தடமான மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ. வழித்தடம், மாதவரம் பால் பண்ணையில் இருந்து தரமணி வரை சுரங்கபாதையாகவும் நேரு நகரில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள அஜந்தா மேம்பாலமும் அடையாறு சிக்னல் மேம்பாலமும் அமைந்துள்ள இடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் வர உள்ளன. அதனால் இரு பாலங்களும் மெட்ரோ பணிகளுக்காக இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி முதற்கட்டமாக அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. மேம்பாலத்தை இடிக்கும் பணிகளுக்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தை இடிக்கும் பணிகள் ஒரு மாத காலம் வரை நடைபெற வாய்ப்புள்ளது. இதனிடையே இடிக்கப்படும் இடங்களில் மெட்ரோ பணிகள் முடிந்த பிறகு மீண்டும் பாலங்கள் அமைக்கப்படும். மேம்பாலங்கள் இடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கட்டப்படும். இதன் மூலம் அடையாறு சந்திப்பில் 4 வழிச்சாலை மேம்பாலம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post டேக் டைவர்சன்..! 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: