திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு; 430 மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் 100 ஆண்டு பழமையான புனித பெரிய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அந்தோணியார் தேர்ப்பவனி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு ஆலய மைதானத்தில் இன்று நடைபெற்றது. அரசு விதிமுறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, முசிறி, லால்குடி, புகையிலைப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை, சிவகங்கை உட்பட பல ஊர்களில் இருந்து 750 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவர்கள் மூலம் கால்நடைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வந்து பார் என களத்தில் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், சேர், சில்வர் பாத்திரங்கள், குக்கர் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. அதேபோல் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வென்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனையொட்டி 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு; 430 மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Related Stories: