நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் பங்கேற்பு

சென்னை: நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் வரும் ஜன. 31 வரை நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முதன் முறையாக ‘தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்’ நடைபெற உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடியை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். தொடர்ந்து நேரு விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மோடிக்கு தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதனையடுத்து, தொடக்க நிகழ்ச்சி முடித்து வைத்த பின்னர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வெடுக்கிறார்.

மேலும், நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் 11 மணி அளவில் திருச்சி ரங்கம் கோயிலை அடைகிறார். காலை 11 மணி முதல் மதியம் 12.40 மணி வரை ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்படும் பிரதமர், மதியம் 2 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலை சென்றடையவுள்ளார். இதனையடுத்து மதியம் 2.45 முதல் 3.30 மணி வரை ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் சாமி தரிசனம் செய்த பின்னர், அன்றைய தினம் ராமேஸ்வரத்திலேயே தங்கும் பிரதமர், 21ம் தேதி காலை, மீண்டும் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இதனையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை மற்றும் கோதண்டராமசுவாமி கோயிலுக்கும் பிரதமர் மோடி செல்கிறார். கோதண்டராமசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, 11 மணி அளவில் ெஹலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர், அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் அதிகாரிகள், காவலர்கள் என 22 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சென்னை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இருபுறமும் வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு விளையாட்டரங்கம் வரையும், அங்கிருந்து கிண்டி ராஜ்பவன் வரையும் மதியம் 3 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, தாசபிரகாஷ் சாலை, அண்ணா சாலை, எஸ்.வி.பட்டேல் சாலைகளில் பயணத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: