தமிழ்நாட்டின் கனவு நனவாகியுள்ளது: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது என கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் தேசிய கீதத்துடன் தொடங்கியது. கேலோ இந்தியா தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்; மிகப்பெரிய விளையாட்டு பாரம்பரியம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே பல சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்து வரும் முதலமைச்சருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 76 புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்துள்ளோம். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது. பொருளாதாரரீதியாக பின்தங்கிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி செய்து வருகிறது. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்-களை வழங்க உள்ளோம்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை அளிக்கும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் புதிய வரலாறு படைக்கும். இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாட்டின் கனவு நனவாகியுள்ளது: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: