ரூ.621 கோடியில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே 4 வழித்தட உயர்மட்ட சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா சாலை. இதில், திருவல்லிக்கேணி சந்திப்பு முதல் கிண்டி வரையிலான பகுதியில் பல்வேறு முக்கிய பகுதிகளிலிருந்து வரும் சாலைகள் இணைகின்றன. இதனால், அந்த சாலை சந்திப்புகளில் எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும். அத்துடன், சாலையைக் கடந்து மறுபகுதிக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்த பிரச்சினையைப் போக்கும் வகையில் அண்ணா சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து தமிழக நெடுஞ்சாலைத் துறை ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு, “சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளைக் கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். இதனால் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள 4 வழி உயர்மட்ட சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.621 கோடியில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.621 கோடியில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே 4 வழித்தட உயர்மட்ட சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: