காவல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் கொண்டாட்டம்

 

மதுரை, ஜன. 19: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில், போலீசார் இணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடினர். மதுரை, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில், உதவி போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் கதிர்வேல், எஸ்.ஐ அன்புதாசன் மற்றும் காவலர்கள் பொங்கல் விழா கொண்டாடினர்.

இதையொட்டி, போலீசார் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து பொங்கலிட்டனர். உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘காவல்துறையினருக்கு அவர்களின் பணி காரணமாக பல்வேறு வேலைப்பளு, மன உளைச்சல்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களை விட, மதுரையை பொருத்தவரை பொங்கலின்போது தொடர்ச்சியாக, மூன்று நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

இதனால் பெரும்பாலான போலீசாரால் பண்டிகையை குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாட முடிவதில்லை. எப்போதும், அலுவல் சார்ந்து பணியில் இருக்கும் போலீசாருக்கு, அவர்களின் அலுவல் நேரங்களில் பண்டிகையை கொண்டாடுவது, மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை உண்டாக்கும். எனவே, காவல் நிலையங்களில் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடுறோம்’’ என்றார்.

The post காவல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: