திருவள்ளுவருக்கு காவி உடை ஆளுநருக்கு கம்யூ., விசிக கருப்புக்கொடி

திருச்சி: திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்ததை கண்டித்து ஆளுநருக்கு மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லெட்சுமியுடன் நேற்று காலை 8.07 மணிக்கு திருச்சி ரங்கம் கோயிலுக்கு சென்று ரங்கநாதர் சன்னதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயர் சன்னிதி அருகே உள்ள  மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை ஆர்.என் ரவி மற்றும் அவரது மனைவியுடன் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரழுந்தூர் சென்று தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கம்பர் பிறந்த இடமான தேரழுந்தூர் கம்பர் மேட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்ததுடன், அங்குள்ள ஆமருவியப்பன் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் கம்பர் மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து கம்பர் கோட்டத்தில் ‘‘அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்’’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.

இதில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையிலான கட்சியினர் குத்தலாம் அருகே சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் நிர்வாகிகள் குவிந்தனர். சேத்திரபாலபுரம் பகுதியில் பிற்பகல் 12 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி காரில் சென்றபோது கருப்புக்கொடி காண்பித்து கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம்: மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் செல்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெயங்கொண்டம் அருகே குறுக்கு ரோடு வழியாக செல்ல இருந்த நிலையில் அங்கு திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அதை பொதுதளத்தில் பதிவிட்டதற்கு ஆளுநருக்கு எதிர்ப்பு ெதரிவித்து கருப்பு கொடி காட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post திருவள்ளுவருக்கு காவி உடை ஆளுநருக்கு கம்யூ., விசிக கருப்புக்கொடி appeared first on Dinakaran.

Related Stories: