சென்னையில் நாளை மறுதினம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை: விமானநிலையத்தில் எஸ்பிஜி ஐஜி பாதுகாப்பு ஆலோசனை

சென்னை: நாளை மறுதினம் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை விமான நிலையத்தில் எஸ்பிஜி ஐஜி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுதினம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி சென்று, பிரதமரை நேரில் சந்தித்து, அழைப்பிதழை வழங்கினார்.

இதையடுத்து பிரதமர் மோடி, தனி விமானத்தில் நாளை மறுதினம் சென்னை வருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில், கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி விட்டு, மறுநாள் டெல்லி செல்கிறார். முன்னதாக அவர் ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் செல்வதாக கூறப்படுகிறது. பிரதமரின் இரண்டு நாள் பயணத்தை ஒட்டி, சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த எஸ்பிஜி, ஐஜி லவ்குமார் தலைமையில், சுமார் 20 பாதுகாப்பு படை அதிகாரிகள், நேற்று மதியம், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். சென்னை பழைய விமான நிலையத்தில், எஸ்பிஜி, ஐஜி லவ்குமார் தலைமையில், சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள், எஸ்பிஜி அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிரதமருக்கு அளிக்க வேண்டிய உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரதமரை வரவேற்க யார் யாரை அனுமதிப்பது, விமான நிலையத்தில் இருந்து, நேரு விளையாட்டு அரங்கிற்கு செல்வதற்கு தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு, சிறப்பு வாகன ஏற்பாடு, சாலைகளில் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. போட்டி நடத்தப்படும் நேரு விளையாட்டு அரங்கத்திலும் எஸ்பிஜி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

The post சென்னையில் நாளை மறுதினம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை: விமானநிலையத்தில் எஸ்பிஜி ஐஜி பாதுகாப்பு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: