முன்பதிவு தொடக்கம் வரும் பிப்.1 முதல் சென்னை-அயோத்தி நேரடி விமான சேவை

சென்னை: சென்னையிலிருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடக்க இருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வார்கள் என்று தெரிகிறது.

இதனால் தனியார் விமான நிறுவனமான, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னை – அயோத்தி இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்றில் இருந்து, இந்த ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும்.

அதே விமானம் மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6.20க்கு சென்னை வந்து சேரும். பயண கட்டணம் ரூ.6,499 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் போயிங் 737-8 ரகத்தைச் சேர்ந்தது. எனவே ஒரே நேரத்தில் 180க்கும் அதிகமான பயணிகள் செல்ல முடியும். இதற்கான முன்பதிவு கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சென்னை – அயோத்தி – சென்னை இடையே நேரடி விமான சேவை ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post முன்பதிவு தொடக்கம் வரும் பிப்.1 முதல் சென்னை-அயோத்தி நேரடி விமான சேவை appeared first on Dinakaran.

Related Stories: