ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர் காளைகளை அவிழ்க்க தடை கோரிய மனு : மதுரை ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு!!

மதுரை : அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர் காளைகளை அவிழ்க்க தடை கோரிய மனுதாரர் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாக்கள் முறையே ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், அதனை தொடர்ந்து 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த மானகிரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் தங்கள் 12,000-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் விஐபி, ஜல்லிக்கட்டு அமைப்பு தலைவர்கள் என கூறி காளைகளை 3 ஜல்லிக்கட்டிலும் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் பல மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகள் காளைகளை அவிழ்க்க வாய்ப்பு கிடைப்பதில்லை. தங்கள் காளைகளை அவிழ்த்துவிட வாய்ப்பு கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். விஜபி என்பவர்களுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்புதராமல் ஒருவரது மாடு ஒரு போட்டியில் மட்டுமே என விடவேண்டும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர் காளைகளை அவிழ்க்க தடை விதிக்க வேண்டும். ஒரு உரிமையாளர் ஒரு போட்டியில் மட்டுமே தனது காளைகளை பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,”எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், “மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது; கோரிக்கை பற்றி மதுரை ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர் காளைகளை அவிழ்க்க தடை கோரிய மனு : மதுரை ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: