பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை..விவசாயிகள் குஷி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மரிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.

காலை 5 மணிக்கு துவங்கிய வாரச்சந்தையில் தற்போது வரை விற்பனை மும்முரமாக கலைக்கட்டியுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், கோவை, சேலம், திருச்சி, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர். பண்டிகை காலம் இல்லாத இதர நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும், பெண் ஆடுகள் அதிகபட்சமாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலும் விற்பனையாகும்.

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனையாகிறது. அதன்படி, கிடா ஆடு 12 முதல் 15 வரையிலும், பெண் ஆடு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலும் ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போட்டிபோட்டு கொண்டு வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வதால் ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் குவிந்துள்ளனர். தற்போது வரை 8 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது.

The post பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை..விவசாயிகள் குஷி..!! appeared first on Dinakaran.

Related Stories: