செப்டிக் டேங்குகளில் மனிதர்களை இறக்கி வேலை செய்யக்கூடாது: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

 

காரைக்குடி, ஜன.9: செப்டிக் டேங்குகளில் மனிதர்களை இறக்கி வேலை செய்யக்கூடாது என நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மனித கழிவுகளை மனிதனே அகற்றுதலை தடை செய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் சட்டம் 2013 தொடர்காக செப்டிக் டேங்குகளில் மனிதர்களை இறக்கி வேலை செய்யக் கூடாது. இது தொடர்பாக தொடர்ந்து பொது மக்களுக்கும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், அதன் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விடுமுறையில் இருந்த தூய்மை பணியாளர் சேவுகப்பெருமாள் கடந்த 7ம் தேதி ரவிச்சந்திரன் மகன் விமல் வீட்டு கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை சரி செய்வதற்காக பணியில் ஈடுபடுத்தியுள்ளார். கழிப்பறை அடைப்பு சரி செய்ய முடியாத நிலையில் செப்டிக் டேங்க் தொட்டியின் மூடியை திறந்து பணி செய்ய முற்படும் போது விஷவாயு தாக்கி பணியாளர் சேவுகப்பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுதலை தடை செய்தல் மற்றும் அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தல் சட்டம் 2013க்கு முரணாக உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாளரை செப்டிக் டேங்க் தொட்டியில் பணி செய்ய நிர்பந்தித்த வீட்டின் உரிமையாளர் மீது சட்டம் 2013ன் படி பிரிவு 7 மற்றும் 9ன் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள கழிப்பறைகளை சுத்த செய்ய பணியாளர்களை ஈடுபடுத்தும் போது தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தும், உரிய நிறுவனங்களின் மூலம் பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என தெரிவித்தார்.

The post செப்டிக் டேங்குகளில் மனிதர்களை இறக்கி வேலை செய்யக்கூடாது: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: