அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 5000 பெண்கள் இணைந்து கொண்டாடிய பிரமாண்ட சமத்துவ பொங்கல் விழா: டிஆர்.பாலு எம்பி பங்கேற்பு

ஆவடி, ஜன. 9: அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 5000 பெண்கள் இணைந்து 1,500 பானைகள் வைத்து பிரம்மாண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்கா வளாகத்தில் 5000 பெண்கள் இனணந்து 1,500 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் நேற்றுமுன்தினம் மாலை கோலாகலமாக கொண்டாடபட்டது. நாட்டுப்புற கலைஞர்கள் நையாண்டி, தவில் நாதஸ்வரம், பம்பை, உடுக்கை, மேலம் மூலம் சிறப்பாக இசைத்தனர்.

இவர்களுடன் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் என கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். முன்னதாக சாதனை படைக்க 1009 பானைகள் வைத்து 3000 பெண்கள் இணைந்து பொங்கல் வைப்பதாக பதிவு செய்யபட்டிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கையை கடந்து, 5000 பெண்கள் இனணந்து 1,500 பானைகள் கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி, மகளிர் சுய உதவிக் குழுவினர் அசத்தியுள்ளனர்.

இதற்காக 1 லட்சம் கரும்பு, 1000 வாழை மரம், மஞ்சல் கொண்டு நடைபெற்ற பொங்கல் விழாவை முன்னிட்டு பூங்கா முழுவதும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு புதுபானையில் பொங்கலிட்ட பெண்கள். பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்வில், இந்து, முஸ்லீம் கிறிஸ்துவம் என பல்வேறு தரப்பட்ட மதத்தினர் பங்கேற்றனர்.

அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில், கொண்டாப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திரைப்பட இயக்குனர் மாரிசெல்வராஜ், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். சமத்துவ பொங்கல் விழாவால் அயப்பாக்கம் அறிஞர் அண்ணா பூங்கா மக்கள் கூட்டத்தால் நிறம்பியது. இதற்கு முன்னதாக நடைபெற்ற கோல போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 600 பெண்களுக்கு பரிசு பொருட்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு மற்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி ஆகியோர் வழங்கினர்.

The post அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 5000 பெண்கள் இணைந்து கொண்டாடிய பிரமாண்ட சமத்துவ பொங்கல் விழா: டிஆர்.பாலு எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: