நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மிகவும் துன்பப்பட்டேன்; கொஞ்சம் கொஞ்சமா தவழ்ந்து முதல்வர் ஆனேன்: எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பேச்சு

மதுரை: ‘கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து முதல்வரானேன். நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்த மிகவும் துன்பப்பட்டேன்’ என எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் கொடியேற்றினார். பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்றார். இந்த மாநாட்டில், ‘‘சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைவேந்தர், டிஎன்பிஎஸ்சி தலைவர் போன்றவற்றில் சிறுபான்மை சமூகத்தினரை நியமிக்க வேண்டும். சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை பழிவாங்கும் கருவிகளாக பயன்படுத்துவது தடுத்து நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும்’’ உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: அதிமுக கிளைச் செயலாளராக இருந்த நான், முதல்வராக வருவேன் என நினைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து முதல்வரானேன். என்னுடைய வளர்ச்சியை கொச்சைப்படுத்துகின்றனர். அதிமுக, சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது. அதிமுக ஒரு நாளும் கொள்கையை விட்டுக் கொடுக்காது. நான்கரை ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன்.

அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த போதும், அதிமுக ஆட்சி நிலைத்து நின்றது. எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. சிறுபான்மை மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். . சூழ்நிலை காரணமாகவே பாஜவுடன் கூட்டணி வைத்தோம். கொள்கை சரியில்லாததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். நாங்கள் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை. மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்டது அதிமுக. இவ்வாறு ேபசினார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த செப். 25ல் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியடைந்ததாக மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜவுக்கு எதிராக உள்ள இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களைக் கொண்ட சிறுபான்மையினர் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக திருப்பும் வகையில் எடப்பாடி பழனிசாமி சில முயற்சிகளை எடுத்து வந்தார். இதற்காக இஸ்லாமிய அமைப்புகளை அழைத்து பேசிவந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் ெநருங்கி வரும் சூழலில் இஸ்லாமியர் வாக்குகளை குறிவைத்து எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் எடப்பாடி பங்கேற்றுள்ளார். எடப்பாடி தன்னை இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவராக காட்டிக் கொள்ளும் வகையிலேயே இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்து உள்ளனர்.

The post நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மிகவும் துன்பப்பட்டேன்; கொஞ்சம் கொஞ்சமா தவழ்ந்து முதல்வர் ஆனேன்: எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: