எளியமுறையில் ஆவணப்பதிவு விரிவாக ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை எய்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்கள் எளிய முறையில் ஆவணப்பதிவு மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து, அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கு எய்தப்பட வேண்டும் என்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கத்தில் 2023 டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியரின் பணிச்சீராய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கி வரும் பதிவுத் துறையில் கடந்த வருடம் டிசம்பர் 2022ம் ஆண்டு அடைந்த வருவாயை விட 2023ம் ஆண்டு டிசம்பர் முடியவுள்ள காலத்தில் கூடுதலாக ரூ.916 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பின்னர் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு அடிப்படையில் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படுவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள், கூட்டு மதிப்பு தொடர்பாக 2023 டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அறிவுறுத்தியபடி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை தொய்வின்றி வசூலிப்பது, சார்பதிவகங்களில் உரிய காரணங்களின்றி நிலுவையில் வைத்துள்ள ஆவணங்களை விடுவிப்பது, பொது மக்கள் எளிய முறையில் ஆவணப்பதிவு மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கு எய்தப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் மூர்த்தி கூறினார்.

The post எளியமுறையில் ஆவணப்பதிவு விரிவாக ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை எய்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: