சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் சுற்றறிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சொத்துகளுக்கு 2017ல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று 2023 மார்ச் 30ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மனுக்களில், 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

மனுககளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில், வழிகாட்டி மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன்பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும்.

இந்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறும் வகையில் உள்ளது என்று இந்த நீதிமன்றம் கருதி சுற்றறிக்கையை ரத்துசெய்து உத்தரவிடுகிறது. விதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வரை 2017 மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் சுற்றறிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: