பெரியார் பல்கலை முறைகேடு விவகாரம் பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேருக்கு போலீசார் சம்மன்: புதிய புகார் தொடர்பாக விசாரணை

சேலம்: புதிய புகார் குறித்து விசாரணை நடத்த பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். மேலும், இதில் தொடர்புடைய பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே பல்கலைக்கழகத்தின் தற்போதைய பொறுப்பு பதிவாளராக இருக்கும் வேதியியல் துறை பேராசிரியர் விஸ்வநாத மூர்த்திக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன், அளித்துள்ள புகாரில், பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி, பொறுப்பு பதிவாளராக (கடந்த செப்டம்பர் 3ம் தேதி) இருந்தபோது தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பூட்டர் பவுண்டேசன் சார்பில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதேபோல் அவரது மனைவியான வனிதா, பூட்டர் பவுண்டேசனில் பணிபுரிந்துள்ளார். அதேபோல், பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் விஷ்ணுமூர்த்தி, துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் மூலக்கருவியாக இருந்துகொண்டு அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். எனவே இவர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

புதிய புகார் குறித்து விசாரணை நடத்த கருப்பூர் போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள விஸ்வநாத மூர்த்தி, வனிதா, விஷ்ணுமூர்த்தி மற்றும் ஏற்கனவே தனியார் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொடர்புடைய பொருளியல் துறை பேராசிரியர் ஜெயராமன், மேலாண்மை துறை பேராசிரியர் சுப்ரமணிய பாரதி ஆகிய 5 பேரிடமும் விசாரணை நடத்த, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று (4ம்தேதி) மற்றும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

* பல்கலை.யில் இருந்த புரோக்கர் குறித்து விசாரணை
பூட்டர் பவுண்டேசன் விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்டதாக கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவர், பெரியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் பல நாட்கள் தங்கியிருந்தார். எதன் அடிப்படையில் அவருக்கு அங்கு தங்க அனுமதி வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விருந்தினர் மாளிகை பொறுப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியார் பல்கலை முறைகேடு விவகாரம் பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேருக்கு போலீசார் சம்மன்: புதிய புகார் தொடர்பாக விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: