செயல்பட தொடங்கிய முதல்நாள் இரவு மட்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பயணம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இந்து சமய அறநிலையை துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், தயாநிதி மாறன் எம்.பி. அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கல்யாணபுரத்தில் 254 குடியிருப்புகள் தை 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

9 அடுக்கு மாடி, லிப்ட், ஜெனரேட்டர், 2 அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு சிறுசிறு வேலைகள் நடந்து வருகிறது,’’ என்றார். அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முழுமையாக ஆய்வு செய்தோம். குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல் தவறு. கூடுதல் பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் இரவு மட்டும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து 10ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

புதிதாக திறக்கப்பட்ட இடம். அதில் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. மக்கள் பயன்பாட்டிற்கு வந்து 48 மணி நேரம் தான் ஆகிறது. குறைகள் 2, 3 நாட்களில் சரிசெய்யப்படும். பயணிகள் மகிழ்ச்சியடையும் அளவிற்கு பணிகள் முடிக்கப்படும். தனியாருக்கு ஒற்றை சாளர முறையில் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.2.40 கோடியை சி.எம்.டி.ஏ.க்கு வருடம்தோறும் செலுத்துவார்கள். எப்போது வேண்டுமானாலும் தகவல்களை வெளிப்படையாக கொடுப்போம். அம்மா உணவகம் தேவை என்றால் பரிசீலிக்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்குள் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொங்கலுக்கு பின் ஏதேனும் குறைகள் இருந்தால் கூறுங்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த பீதியை ஊடகங்கள் கிளப்ப வேண்டாம். முதற்கட்டமாக திறந்தோம், விட்டோம் என்றில்லாமல் தொடர்ந்து கண்காணித்து தேவையான பணிகளை செய்வோம் என்றார். அப்போது, மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post செயல்பட தொடங்கிய முதல்நாள் இரவு மட்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பயணம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: