அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்: ஈரேழ் புவனமும் பூத்த உந்தி!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

“மண்ணில் வழுவா’’

பூமாதேவியை பற்றியே “மண்ணில்’’ என்று தொடர்கிறார். “மண்ணில் வழுவா’’ என்பதனால் ஒவ்வொரு மனிதனும், தான் செய்த முன் வினைப்பயனால் வரும் துன்பத்தை விலக்கி கொள்ளவும், நிகழ்வினையால் வரும் ஆசைகளைப் பெருக்கிக் கொள்ளவும் செய்கின்றனர். இந்த ஆசையானது அடுத்தப் பிறவிக்கும் செல்லும். சென்ற பிறவியில் அனுபவிக்காமல் மீதமுள்ள வினையின் காரணமாய் தோன்றும் துன்பத்தை தவிர்ப்பதால் அதை அனுபவிப்பதற்கு மட்டும் ஒரு பிறவியும் என்று பிறவித் தொடரை அதிகரிக்கும்.

இத்தகைய சூழலில் உபாசனைப் போன்ற நல்வழிகளில் மனிதன் பயணித்தாலும் சில நேரங்களில் உபாசனை பயனளிக்கவில்லை என்று இக்காரணத்தால்தான் நல் உபாசனை என்றும் பலனைத்தரும். தராமல் போகாது என்று உபாசனை வழியில் செல்வோரின் மனத் தளர்வை சூட்டிக்காட்டி அதை முற்றிலுமாக நீக்க `தளர்வறியா மனம் தரும்’ (69) என்கிறார். பூமாதேவியை வணங்குவதையே “மண்ணில் வழுவா’’ என்கிறார்.

மனிதர்கள் தன் வாழ்க்கையை வழுக்கல் குற்றமற்றதாக வாழ வேண்டும். அந்த குற்றமற்ற வாழ்க்கை என்பது அறம் வழுவாமலும் ஆன்மிக நெறி வழுவாமலும் [இடைவிடாமலும்] கொண்ட நம்பிக்கையை இழக்காமலும் முயற்சியை மேலும்மேலும் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் பட்டர் “மண்ணில் வழுவா’’ என்கிறார். சொர்க்கம், நரகம், கைலாசம், வைகுண்டம் என்ற இடங்களிலிருந்து நாம் வாழும் இப்புவியை தனித்துக் காட்டவே “மண்ணில்’’ என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு இடத்திற்கும், காலத்திற்கும், நிகழ்விற்கும் தக்கவாறு தர்மங்கள் வெவ்வேறாக அமைந்துள்ளது. தேச தர்மம் தட்பவெப்ப நிலைகளாலும் காலம் தர்மம் வளர் பருவ நிலையினாலும் [குழந்தை, பால, யவ்வன, வ்ருத்த போன்ற பருவம்] அவரவர் வாழ்வதற்கு செய்யும் குலத் தொழில் சார்ந்த அறங்கள் மாறுபடுவது. இந்த நுட்பத்தை சரியாக புலப்படுத்தவும் இப்பூவுலகத்தில் அவரவர் வாழும் இடம் சார்ந்து செய்யப்படும் அறத்திலிருந்து வழுவாமையே “மண்ணில் வழுவா’’ என்கிறார்.

“பிறவியை’’

ஆன்மாக்கள் உடல் பெறுதலையே பிறவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். அந்த உடல் சார்ந்த மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம், புத்தி என்ற கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்து, நுகர்ந்து, நினைத்து, தெளிந்து என்ற ஏழுவகைப் பண்பிற்கு தகுந்த உடல்கள் மாறுபடும். அதனால், ஆன்ம ஞானம் ஏற்படுவது தடைப்படும். உதாரணமாய், புல்லாகப் பிறந்தால் ஓர் அறிவுதான் இருக்கும் பாம்பாகப் பிறந்தால் மூன்று அறிவுதான் இருக்கும். அதனால், ஆன்ம ஞானம் பெற இயலாது. அது எடுத்துக் கொண்ட சரீரம் பற்றிய ஞானத்தை மட்டுமே பெறமுடியும். இவ்வகை துன்பத்தை நமக்கு அறிவுறுத்தவே “பிறவியை’’ என்கிறார்.

பூவுலகத்தில் பிறப்பானது புல், புழு, மரம், பல்வேறு மிருகம், பறவை, பாம்பு, கல்,மனிதர், அசுரர், முனிவர், தேவர் என பலவகை பிறப்பு உள்ளது. அதில் மனித பிறவி மட்டுமே ஆன்மஞானம் அடைவதற்கு சிறந்தது என்கிறார். அதனால், அதை கவனமாக இப்பிறவியை பயன்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறு என்று பிறவியின் சிறப்பை எடுத்துக் கூறுவதையே “பிறவியை” என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். மேலும், “பிறவியை” என்ற வார்த்தையால் மனிதப் பிறவிக்கு மட்டும் ஏற்படும் சில பிரச்னைகளை வரையறுக்கிறார்.

இதை சில பாடல் வரிகளை கொண்டு நாம் உணரலாம். `அறிவொன்றிலேன்’ (81) என்பதனால் ஆன்ம அறிவு இயல்பாக இல்லை. அதை முயற்சி செய்தே அடைய வேண்டும் என்கிறார். `ஆசை கடலில் அகப்பட்டு’ (32) இப்பிறவி ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமையால் அதிகப்படுத்தும் என்கிறார். `ஒரு நாளும் தளர்வறியா மனம்’ (69) என்பதனால் சாத்திரங்களாலும் தோத்திரங்களாலும் அறிவுறுத்தினாலும் மனித மனம் ஒவ்வொரு நாளும் மாறும் இயல்புடையது. அதிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். `இல்லாமை சொல்லி இழிவுபட்டு’ (54) என்பதினால் செல்வ நிலையாமை, வறுமையை சுட்டிக்காட்டுகிறார்.

ஒவ்வொரு நாளும் தாம் செய்யும், செய்ய வேண்டிய, செய்து கொண்டிருக்கிற பணியையே மனது பெரிதும் சார்ந்து இருக்கும். அது உபாசனைக்கு மிகப் பெரிய தடை என்பதையே `கரும நெஞ்சால்’ (3) என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். தவம், ஜபம், பூசை, த்யானம், இவற்றை இயல்பாகவே மனது விளக்கும். அதில் ஈடுபடுவதை பயிற்சியினால் மட்டுமே செய்ய முடியும் என்பதை ‘நெஞ்சம் பயில’ (59) என்பதனாலும் அறியலாம். இது போன்ற மானிடப் பிறப்பில் சில தொந்தரவுகள் இருப்பதை நமக்கு சூட்டவே “பிறவியை” என்கிறார்.

“மால்வரையும்’’

என்பதை இரண்டு பொருள் படக்கூறுகிறார் பட்டர். ஒன்று உலகியல் பொருள். ஒன்று சாத்திரப் பொருள். முதலில் உலகியல் பொருளைக் காண்போம். “மால்’’ என்பது மயக்கத்தை அளிப்பது. மோகத்தினால் வரும் உள்ளப் பண்பு “வரை” என்பது எல்லை இரண்டு சொற்களையும் இணைத்து புரிந்து கொள்ள ஒரு தல புராணத்தை காண்போம். தேவர்கள், அசுரர்கள் இருவரும் இணைந்து அமுதம் கடைந்தார்கள்.

அதை அசுரர்கள் அருந்தினால் துன்பம் ஏற்படும் என்பதனால் ஆணாகிய மகாவிஷ்ணு, தான் ஒரு பெண்ணாக மாறினார். அந்த பெண் தோற்றத்தை ஒரே சமயத்தில், காண்போறுக்கு உள்ளதை மறைத்து அசுரர்களுடைய பார்வைக்கு காமத்தை தூண்டும் பெண்ணாகவும், தேவர்களுக்கு அன்பை வளர்க்கும் தாயாகவும், பரமனுக்கு அறத்தை வளர்க்கும் மனைவி போலும் தன் தோற்றத்தை காட்டினார்.ஆண் என்கின்ற அறிவை மறைத்துமூவருக்கும் மூன்று விதமாக தோன்றிய வடிவத்தை பார்க்கும் பொழுது தேவர்களுக்கும், பிரம்மனுக்கும், அசுரர்களுக்கும் தோன்றியதே மயக்கம். இதையே பட்டர் “மால்வரை” என்கிறார்.

மானுடர்களுக்கு வாழ்வை பற்றிய கருத்தானது இது போன்ற மயக்கத்தையே பெற்றுள்ளது. இது நிலைக்கும் அதாவது யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கையிலுள்ள உயிர் நிலையாமையைப் பற்றி எல்லோரும் அறிந்திருந்தும் அது நிலைப்பதாகவே நாம் கருதி வாழ்கிறோம். இதையே “மால்வரையும்” என்பதிலிருந்து அறியலாம். இப்படிப்பட்ட உலக வாழ்க்கை தரவல்லது துன்ப உணர்வு தோன்றாமல் வாழ்வை சலிப்பில்லாமல் செய்வதும் புத்துணர்ச்சி ஆக்குவதும் உலகியல் இன்பங்களையே முதன்மையாகக் கொண்டு அருளவல்லது குலதெய்வம்.

இந்த குலதெய்வமானது அனைத்துஇன்பத்தையும் அருளவல்லது. இவை அனைத்துமே விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவையே என்கிறது சாத்திரம். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மாயையாக இருந்தாலும் ஆத்ம ஞானத்திற்கு ஒரு சிறிது வழிவகுக்கிறது என்பதையே “மால்வரையும்’’ என்ற வார்த்தையால் வலியுறுத்துகிறார்.

“பொங்குவர் ஆழியும்’’

என்ற சொற்களை இப்பாடலை பொறுத்தவரை அருகருகே வைத்து பொருள்கொள்ள வேண்டும். இதில் தங்குவர் என்ற வார்த்தைக்கு இதற்கு முன் பொருள் கூறி இருந்தாலும், இச்சொல்லை இரு பொருள் பட பயன்படுத்துகிறார் பட்டர். அதனால், மீண்டும் இங்கே தங்குவர் என்ற சொல்லை வேறு பொருளில் காண இருக்கிறோம்.

முதலில் `உவர்’ என்ற சொல்லிற்கு கடல் என்று பொருள். நாம் இப்பொழுது காணும் உப்புச்சுவை மிக்க கடலை மட்டுமே குறிப்பிடாமல் சாத்திர ரீதியில் வேறு ஒரு கடலும் இருப்பதாக குறிப்பிடுகிறார் அபிராமிபட்டர். அந்த கடல்களையே தங்குவர், பொங்குவர், கொங்குவர் என்ற வார்த்தைகளால் நமக்கு வெளிப்படுத்துகிறார். இவ்வார்த்தைகள் அனைத்தும் பொருள் சேர்ந்து கடலின் பொதுப் பெயரையும், சிறப்பு பெயரையும் சூட்டுவதாகவே அமைந்துள்ளது.

பூமி தேவிக்கு செய்யப்படும் மிருத்சங்கிரஹனம் என்னும் வழிபாட்டில் உள்ளதேவதைகளையே இங்கு “தங்குவர், கொங்குவர், பொங்குவர்” என்ற வார்த்தைகளால் சப்தாநவம் என்ற வடமொழிச் சொல்லின் வரியை இங்கே குறிப்பிடுகிறார். பூமாதேவிக்கு பூஜை செய்து அவள்வயிற்றிலிருந்து மண்ணை எடுத்து அந்த மண்ணில் நவதானியங்களை விதைத்து அதன் வளர்ச்சியைக் கொண்டு பூசனையின் பயனை உறுதி செய்வர். உதாரணமாய் நவதானியங்கள் நன்கு வளர்ந்தால் கேட்ட பலன் கிடைக்கும். வளராவிடில் கேட்ட வரம் கிடைக்க சற்று காலதாமதமாகும்.

எள் முதலியன நன்றாக வளர்ந்து பிற தானியங்கள் சரிவர வளரவில்லை என்றால் எதிர்பார்த்த விளைவுக்கு எதிர் விளைவு உண்டாகும் என்று இந்த பூசனையால் அறிந்து கொள்வார்கள். சரிவர வளரவில்லை என்றால் பின் அதை போக்கி நற்பலனை தர ப்ராயசித்தமும் செய்வார்கள். அந்த மிருத்சங்கிரஹன பூசையில் பூமாதேவி, பத்து திசை பாலகர்கள், ஏழு கடல்கள், ஒன்பது கிரஹங்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள், விஷ்ணு ஆகியவர்கள் பூசிக்கப்படுகிறார்கள்.

அந்த தேவதைகளில் ஒருவரான ஏழு கடல்களை “தங்குவர் கொங்குவர் பொங்குவர்” என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். “உவர்” என்பதனால் உப்பு கடலையும் பொங்குகின்ற தன்மையுடைய பால்கள் இப்பொருள்களாலான உவர் கடல் அதாவது பாற்கடல், கற்கடல் என்ற இரண்டு கடலையும் “தங்கு” என்பதனால் நீர் ஆவியான பிறகும் தங்கி நிற்கும் பண்பு கொண்ட உப்பை தங்கு என்கிறார். “உவர்” என்பதனால்கடலையும் “தங்கு” என்பதனால் உப்பையும் “தங்குவர்” என்பதனால் உப்பு கடலையும், பாலில் ஊற்றும் உரை சிறிது நேரம் தங்கி மொத்த பாலையும் தயிராக்கிவிடும்.

அந்த தங்கும் பண்பையே தயிர் என்றும், உவர் என்பதனால் கடலையும் “தங்குவர்” என்பதனால் தயிர் கடலையும் “கொங்கு” என்பதற்கு இனிப்பு சுவையுடைய தேன் மற்றும் கரும்பு சர்க்கரையை குறிக்கும் சொல். அந்த வகையில் “உவர்” என்பதை சேர்த்து கரும்பு சாறு கடல் மேலும் “கொங்கு” என்னும் சொல் இனிய சுவையை உடைய நெய்யை குறிக்கும். “உவர்” என்பது கடலைக் குறிக்கும். ஏழுகடலையும் “பொங்குவர் அழியும்” என்கிறார்.

“ஈரேழ் புவனமும் பூத்த உந்தி”

என்பதனால் பதினான்கு உலகங்களையும் குறிப்பிடுகிறார். ஓர் ஆன்மா பதினான்கு உலகங்களுக்கு சென்று இன்ப, துன்பங்களை அனுபவிக்க இயலும், அந்தந்த உலகத்தில் வெவ்வேறு விதமான உடல் அமைப்பு, சுற்றுச்சூழல், பெறும் அனுபவம் இவையாவும் மாறுபடும். அந்த அனைத்து உலகத்திலும் ஆன்மாக்களுக்கு உடலை அளித்து உதவுகிறவள் உமையம்மையே. அதனாலேயே இவ்வுலகம் அல்லாது பதிநான்கு உலகத்திற்கும் ஒரே தாய் உமையம்மையே என்பதைச் சூட்டவே “ஈரேழ் புவனமும் பூத்த உந்தி’’ என்கிறார்.

ஈரேழ் புவனத்தில் உள்ளவர்கள் மனுஷ, கந்தர்வ, கின்னர, கிம்பு ருஷ, அசுர, தேவ, யக்ஷ, ரக்ஷ, ராக்ஷஷ, வேதாள, பூத, பித்ரு, முனி, ரிஷி என்ற பதினான்கு வகையான வேதங்களை உடல்களை படைத்தருள்பவள் பூதேவி.“புவனம்” என்பது இரட்டை தன்மையைக் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு ஆகம கலைச்சொல்லாகும். இந்த இரட்டை என்பது ஏழு வகையாகும்.

*ஒன்றாய் – வேறாய் [ஏக,பஹிர்]

*அகம் – புறம் [அந்தர்,பஹீ]

*பருந்த – நுண்ணிய [ஸ்தூல,சூக்ஷ்ம]

*உண்மை – பொய் [சத்ய,மித்யா]

*அறிவிலாதது – அறிவுடையது [ஜட,சித்]

*அசைவதும் – அசைவில்லாததும் [சரா,சர]

*உள்ளது – இல்லாதது [வியாப்தி, அவ்வியாப்தி] என்ற ஏழு இரட்டை பண்புகளையும் குறிக்கும்.

உமையம்மையானவள் இதன்படி அனைத்து ஆன்மாக்களுடன் அவைகளுக்கு அமைக்கப்பட்ட உடலுடனும் அவைகள் இருக்கும் உலகுடனும் அவர்களுக்கு உண்டான தொடர்பை வலியுறுத்தவே “ஈரேழ் புவனமும் பூத்த உந்தி” என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்: ஈரேழ் புவனமும் பூத்த உந்தி! appeared first on Dinakaran.

Related Stories: