கொள்ளிடம் பகுதியில் பொங்கலுக்கு மண்பானை தயாரிக்கும் இன்ஜினியர் பட்டதாரி

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பரவலாக மண்பாண்ட தொழில் இருந்து வந்தது. 30 வருடங்களுக்கு முன்பு மண் பானையை அனைவரும் பெரிதும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் காலப் போக்கில் மண் பாண்டங்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.

உலோக பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டபடியால் மண் பாண்டங்களில் பயன்பாடு குறைந்து கொண்டே வந்த போதிலும், அதன் அருமையை கருதி இன்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பண்டைய வழக்கப்படி பொங்கல் பண்டிகையன்று மண்பாண்டங்களை வைத்து பொங்கல் இடுவதை இன்றும் வழக்கமாக வைத்து வருகின்றனர். இன்னிலையில் கொள்ளிடம் பகுதியில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் குறிப்பிட்ட சில தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், திருமயிலாடி, வேட்டங்குடி, மாதிரவேளூர், மாதானம், கொப்பியம் உள்ளிட்ட சில இடங்களில் சிலர் மட்டும் பாரம்பரியமாக அப்படியே ஈடுபட்டு வருகின்றனர். வேட்டங்குடி கிராமத்தில் ஒரு குடும்பத்தில் பாரம்பரியமான மண்பாண்ட தொழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் நெடுஞ்சாலைத்துறையில் பணி புரிந்து வரும் மாரிமுத்து என்பவரும் தனது குடும்ப குலத்தொழிலை விடாமல் விடுமுறை தினங்களிலும் காலை இரவு என ஓய்வு நேரங்களிலும் மண்பானைகள் செய்து வருகிறார். இதில் இவருக்கு உதவியாக. அவரது மகன் ஏரோநாட்டிக்கல் பட்டதாரி துளசேந்திரன் மற்றும் குடும்பத்தினர் பாரம்பரிய தொழில் கற்றுக்கொண்டு மண்பானைகள் தயார் செய்து வருகின்றனர். துளசேந்திரன் ஏரோ நாட்டிக்கல் பட்டதாரியாக இருந்தும் பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து துளசேந்திரன் கூறுகையில், நான் ஏரோநாட்டிகல் பட்டதாரி. எங்களின் பாரம்பரிய குடும்ப தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் தொழில் எனது தந்தையின் மூலம் நான் கற்றுகொண்டு பானை, சட்டி, மண்ணடுப்பு, மண் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை மண்ணால் தயார் செய்து வருகிறேன். எங்கள் குடும்பம் இதில் அந்த காலத்தில் இருந்து பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தொழில் தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் நசிந்து வருகிறது. இதனை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் நான் இதில் ஈடுபட்டு வருகிறேன். இதை நாம் பயன்படுத்தும் போது நோயின்றி வாழ முடிகிறது.

மண்பாண்டத்தில் சமைத்து உண்ட நமது மூதாதையர்கள் நூறாண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தனர். நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இயற்கையுடன் பிணைந்துள்ள மண்பாண்டங்களை உற்பத்தி செய்வதை ஊக்கபடுத்த தற்போது உள்ள இளைஞர்கள் இந்த தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள மண்பாணட தொழிலாளர் களை ஊக்கபடுத்த வேண்டும். அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் மண்பானை அடுப்பு சேர்த்து வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிளர்களுக்கு வழங்கப்படும் மழை கால நிவாரணத்தை பத்தாயிரமாக வழங்க வேண்டும். தற்போது பெய்து வரும் மழையால் டெல்டா மாவட்டங்களில் மண்பாண்டதொழில் மிகவும் பாதித்துள்ளது.

பொங்கலுக்கு தயார் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்ப்பட்டுளளது. மண்பாண்ட உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் மண்பாண்ட தொழிலையும் தொழிலாளர் களையும் காக்கும் வண்ணம் மழைக்கால நிவாரணத்தை உடனே விடுபட்ட அனைவருக்கும் கணக்கீடு செய்து வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களை தமிழக முதல்வர் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post கொள்ளிடம் பகுதியில் பொங்கலுக்கு மண்பானை தயாரிக்கும் இன்ஜினியர் பட்டதாரி appeared first on Dinakaran.

Related Stories: