மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையில் சோதனை நடத்த சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரை தடுத்ததுதொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் உட்பட பலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக உதவி இயக்குநருக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், 3வது முறையாக நேற்று அவருக்கு தல்லாகுளம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த இறுதி சம்மனுக்கு உரிய விளக்கம் வழங்காமலும், ஆஜராகாமலும் இருப்பின், வாரன்ட் பெற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு வரவழைக்கும் தேதியை வெளியிட மதுரை போலீசார் மறுத்தனர். இதற்கிடையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனை குறித்து விபரம் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
The post லஞ்ச ஒழிப்பு சோதனை அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.