ஆள்கடத்தல் என்று பிரான்சில் தடுக்கப்பட்ட விமானம் இந்தியா புறப்பட்டது

பாரிஸ்: மனித கடத்தல் நடப்பதாக பிரான்சிஸ் தடுத்து வைக்கப்பட்ட ருமேனிய விமானம் 276 இந்திய பயணிகளுடன் நேற்று இந்தியா புறப்பட்டது. ஐக்கிய அரசு எமிரேட்சில் இருந்து 303 பயணிகளை ஏற்றி கொண்டு ருமேனிய விமானமான ஏ340 விமானம் கடந்த 22ம் தேதி நிகாராகுவா நாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அங்கு வந்த பிரான்ஸ் காவல்துறையினர் விமானத்தில் மனித கடத்தல் நடப்பதாக கூறி விமானத்தை தடுத்து நிறுத்தி வைத்தனர்.

இதைதொடர்ந்து விமான பயணிகளிடம் காவல் துறையினர் முதலில் விமானத்தில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தியது. தொடர்ந்து விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, 2 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்ஸ் நாட்டில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தனர். 2 பேர் சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பாக சந்தேக வளையத்தில் விசாரிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்கு பின் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்தில் வைத்து பயணிகளிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிலர் இந்தியிலும், சிலர் தமிழிலும் பேசியதாக பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டு அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த விசாரணையில் ருமேனிய விமானத்தில் மனித கடத்தல் நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு விமானம் புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமான பயணிகள் சிலர் சொந்த நாட்டுக்கு செல்ல விரும்பாததால் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் புறப்பட்ட ருமேனிய விமானம் முதலில் ஐக்கிய அரபு எமிரேட்சில் தரையிறங்கும். பின்னர் அங்கிருந்து 276 இந்தியர்களுடன் மும்பை விமான நிலையத்தை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் அடைக்கலம் கேட்டுள்ள 25 பேரும், சந்தேக வளையத்தில் வைக்கப்பட்ட 2 பேரும் பிரான்சிலேயே தங்கியுள்ளனர்.

The post ஆள்கடத்தல் என்று பிரான்சில் தடுக்கப்பட்ட விமானம் இந்தியா புறப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: