உதகையில் பல்வேறு இடங்களில் கடும் உறைபனி நிலவுகிறது; 50 நாட்கள் தாமதமாக தொடக்கம்

உதகை: உதகை, காந்தல், தலைக்குந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கடும் உறைபனி நிலவுகிறது. உதகையில் 50 நாட்கள் தாமதமாக உறைபனி காலம் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவும். காலநிலை மாறுபாட்டால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கின

புல்வெளிகள், வாகனங்களின் மீது வெள்ளைக்கம்பளம் போர்த்தியது போல் உறைபனி படிந்துள்ளது. உதகையில் கடும் குளிர் நிலவுதால் காலையில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். உதகை தலைக்குந்தா பகுதியில் ஒரு டிகிரி செல்சியஸ், உதகை நகரில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. உதகையில் நிலவும் பனிப்பொழிவால் மலைத்தோட்ட காய்கறி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும். குளு, குளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது. இன்று காலை ஊட்டியில் பல்வேறு இடங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. இதுதவிர வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது பனிகட்டி உறைந்திருந்தது.

குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுவர்ட்டர் அணிந்து கொள்கின்றனர். வேன், ஆட்டோ டிரைவர்கள் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுவர்ட்டர், மப்புலர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர், கோத்தகிரி, பர்லியார், கொடநாடு, ஒட்டுப்பட்டறை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

The post உதகையில் பல்வேறு இடங்களில் கடும் உறைபனி நிலவுகிறது; 50 நாட்கள் தாமதமாக தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: