இதையடுத்து 1 லட்சம் கன அடி தண்ணீர், நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெளியேறியது. இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகம், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, சந்திப்பு சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நெல்லை டவுனிலும் கட்டுக்கடங்காத வெள்ளத்தால் பல குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. நெல்லையை கடந்த தாமிரபரணியின் பெருவெள்ளத்துடன் சிற்றாற்றில் இருந்து வரும் வெள்ளமும் கலந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறியது. மேலும் ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், திருச்செந்தூரிலும் அப்போது பெருமழை கொட்டியது.
இதனால் ஸ்ரீவைகுண்டம், பொன்னன்குறிச்சி, ஏரல், காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய நகரங்களும், சுற்றுவட்டார கிராமங்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. ஏரல் உயர் மட்ட ஆற்றுப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதேபோல ஆத்தூர் ஆற்றுப்பாலமும் பலத்த சேதமடைந்துள்ளது. கிராமங்களுக்கு செல்லும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து நெல்லை – தூத்துக்குடி, நெல்லை – திருச்செந்தூர், திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையே போக்குவரத்து துவங்கியுள்ளது.
தூத்துக்குடி நகரத்தில் மழை நின்று நேற்றுடன் 5 நாட்கள் கடந்த போதிலும் பெரும் பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடிந்தபாடில்லை. இந்த வெள்ளத்தில் பல கிராமங்களில் குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளை பலர் இழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் பல கிராமங்களில் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட சாதனங்கள் அனைத்தும் வெள்ளத்தோடு சென்று விட்டது. கடைகளில் இருந்த அரிசி மூட்டைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏரல் பகுதிகளில் பல கடைகளில் தண்ணீர் புகுந்து விட்டதால் கடைகளை உடனடியாக திறக்க முடியவில்லை. பைக்குகள், வேன்கள், மினி லாரிகள், சரக்கு வாகனங்கள் என பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குவிந்து கிடக்கின்றன.
ஏரல், பெருங்குளம், முக்காணி, காயல்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. மின்சார லைன்களும் கீழே விழுந்து சாய்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இவற்றை சீரமைத்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்க மின்சார துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் மின் துறையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் தாமிரபரணி ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குடிநீர் பைப் லைன்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.
இவற்றை சீரமைத்து குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் நடந்து வருகின்றன. கனமழையால் ஆடுகள், மாடுகள் நூற்றுக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. பல கால்நடைகளை காணவில்லை. இதனால் கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பொதுமக்கள் வீடுகளையும் இழந்து, வருவாயும் இழந்து தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பரிடப்பட்டிருந்த நெல், வாழை பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகி விட்டன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆன நிலையில் மறு சீரமைப்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த வீடுகள், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் இறப்பு, நெல், வாழை பயிர்கள் சேதம், குளங்கள் உடைப்பு ஆகியவை குறித்து அந்தந்த துறையின் மூலம் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. பலத்த சேதத்திற்குள்ளான ஏரல், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் குடியிருப்புகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் அரசுத் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 4 மாவட்டங்களிலும் 10 அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர்களுடன் இணைந்து முழு வீச்சில் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
* மின் சாதனங்களை பரிசோதித்து இயக்குங்கள்
பெருமழை வெள்ள காலத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நீர் வடிந்துள்ள இடங்களில் வீடுகளுக்கு செல்லும் மக்கள் மின் இணைப்புகளை முறையாக பரிசோதித்த பிறகு அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. அதேபோல விவசாய நிலங்கள், மரங்கள் ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் ஏதேனும் உரசிக் கொண்டு உள்ளதா? அறுந்து காணப்படுகிறதா என்பதை எல்லாம் கவனமாக பார்த்த பிறகே செல்ல வேண்டும். இது தொடர்பாக புகார்கள், தகவல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக ‘மின்னகம்’ உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை வெள்ள சேத கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்: சாலை, குடிநீர், மின் இணைப்பு வழங்கும் நடவடிக்கைகளும் மும்முரம் appeared first on Dinakaran.