கலைஞர் நூற்றாண்டு விழா சேலத்தில் 27ம் தேதி நடக்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா 27ம் தேதி சேலத்தில் நடத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில், “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்“ குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது : கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மூத்த அமைச்சர்களின் தலைமையில், 12 குழுக்களை அமைத்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான “பகுத்தறிவு சீர்திருத்தச் செம்மல் கலைஞர்“ குழு சார்பில் அண்மையில் வேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

“நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்“ குழு சார்பில், சேலத்தில் 22ம் தேதி விழா நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக, அமைச்சர்கள் மழை நிவாரணப் பணிகளில், ஒரு வாரத்திற்குமேல், ஈடுபட வேண்டியிருந்ததால், “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்“ குழுவின் விழாவை வரும் 27ம் தேதி நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், குழுவின் உறுப்பினர், செயலாளர் சந்தரமோகன், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, சிறப்பு அலுவலர் விஸ்வநாத், குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரூப்மதி, ஓவியர் மருது, கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஸ்தபதி செல்வநாதன் உட்பட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் பங்கு பெற்றனர்.

 

The post கலைஞர் நூற்றாண்டு விழா சேலத்தில் 27ம் தேதி நடக்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: