* விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மகளை மீண்டும் வாலிபர் கடத்தி சென்று விட்டதாகவும் அவரை மீட்டு தரக்கோரியும் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இந்நிலையில் மனு கொடுக்க வந்த தம்பதியினர் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வடக்கு ரயில்வே குடியிருப்பை சேர்ந்த தம்பதியான அந்துவான்-மரிய ஆரோக்கியம் என்பது தெரியவந்தது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது மகளை, சேவியர் குடியிருப்பை சேர்ந்த ஒருவர், ஒரு தலையாக காதலித்ததை நாங்கள் மறுத்தோம். அவர், எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி, எங்களது மகளை கடந்த ஜனவரியில் வீட்டிலிருந்து கடத்தி சென்று விட்டார். தகவலறிந்து நாங்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், அவர்கள் எனது மகளை கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார், எங்கள் மகளை கடத்திய நபர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மகளிர் போலீசார், நான் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கக் கோரி, எங்கள் வீட்டுக்கும், பணிபுரியும் இடத்துக்கும் வந்து தொல்லை செய்தனர். இதையடுத்து, பெண்ணை கடத்திய நபர் மீது நடவடிக்கை கோரி நாங்கள் எஸ்.பியிடம் புகார் அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த நபர் கடந்த 10ம் தேதி மீண்டும் எங்களது மகளை கடத்தி சென்று விட்டார். போலீசார் மீது நம்பிக்கையில்லாத நிலையில், ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மகளை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மகளை 2வது முறையாக கடத்தி சென்ற வாலிபர் appeared first on Dinakaran.