கனக புஷ்பராகம்

குருவிற்கு உரிய ரத்தினம் “கனக புஷ்பராகம்’’ ஆகும். பொன்னிறத்தவன் பொன்னன் என்று குரு அழைக்கப்படுவதால், அவனுக்குரிய ரத்தினமாக மஞ்சள் நிற புஷ்பராகம் விளங்குகின்றது. இதில் வெள்ளை புஷ்பராகம் என்று ஒரு வகை உண்டு, அதைவிட மஞ்சள் நிறத்தில் உள்ள கனக புஷ்பராகம் சிறந்த பலனை தரும்.

யார் அணியலாம்?

குரு ராசிகளான தனுசு, மீனம் ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் அணியலாம். தனுசு, மீன லக்னத்தில் பிறந்தவர்களும் லக்கினாதிபதி வலுவாக இருந்தால் அணியலாம்.

யார் அணியக்கூடாது?

குருபகவானுக்கு எதிரியான சுக்கிரனின் ரிஷபம், துலாம் ராசிக்குரியவர்களும், புதன் ராசியான மிதுனம், கன்னி, ராசி அல்லது லக்கினத்தில் பிறந்தவர்களும் புஷ்பராகம் அணியக்கூடாது. குருவின் மனைவி சந்திரனிடம் சோரம் போய் புதனைப் பெற்றெடுத்ததால் குருவுக்கு சந்திரனும் புதனும் பகை கிரகங்கள் ஆகின்றனர். சுக்கிரன் அசுரர்களின் குரு என்பதால் தேவகுருவான வியாழனுக்கு பகை கிரகம் ஆகிறார். எனவே இவர்களின் புதன் ராசிகளான மிதுனம், கன்னி ராசிகளுக்குரிய ரத்தினமான மரகதம் மற்றும் சுக்கிரன் ராசிகளான ரிஷபம், துலாத்துக்குரிய வைரம் ஆகியவற்றோடு புஷ்பராகத்தை சேர்த்து அணிய கூடாது. அணிந்தால் கிரக யுத்தம் ஏற்படும். ஒரு நன்மையும் நடக்காது.

என்ன நன்மை?

குரு அல்லது வியாழன் போகத்திற்குரிய கிரகம் என்பதால் தாம்பத்ய வாழ்வில் பிரச்னை இருப்பவர்களுக்கு கனக புஷ்பராகம் மிக நல்ல தீர்வை வழங்கும். கனக புஷ்பராகம் அணிவதால், குழந்தை பிறப்பில் தடை, தாமதம், சிக்கல்கள் இருப்பவர்களுக்கு நல்ல தாம்பத்தியம் அமைந்து விரைவாக குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

எந்த தொழில் செய்பவர்கள் அணியலாம்?

வியாழன், செல்வத்துக்கு அதிபதி ஆனவன். அவன் தனகாரகன் என்பதால், கனக புஷ்பராகம் அணியும் வணிகர்களுக்கு நல்ல பணச் செழிப்பு இருக்கும். வணிகர், ஏற்றுமதியாளர், தொழிலதிபர் போன்றோர் அணியும்போது பண ஓட்டம் (turn over) சரளமாக இருக்கும். தினமும் பணம் வந்து போய்க் கொண்டே இருக்கும்.

ஆன்மிக பலம்

குரு ஆன்மிகத்திற்குரிய கிரகமாக விளங்குவதால், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் கனக புஷ்பராகம் அணியலாம். இவர்கள் பல திருத்தலங்களுக்கு சென்று தெய்வ தரிசனம் செய்யவும், புனித யாத்திரைகள் மேற்கொள்ளவும் கோயில் கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகம், வருஷாபிஷேகம், போன்றவை நடத்தவும் கனக புஷ்பராகம் வழி வகுத்துக் கொடுக்கும். கோயில் தர்மகர்த்தாக்கள், கட்டளைதாரர், குருக்கள், பட்டர், புஷ்ப கயங்கரியம் செய்பவர்கள் கனக புஷ்பராகம் அணியலாம்.

குருவருள், திருவருள் பெருகும்

குருவருள், திருவருள் வேண்டுகின்றவர்கள் புஷ்பராகம் அணிவதால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல குழந்தைகள் பிறக்கும். தொழில் மேன்மை அடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடலாம்.

தோஷ நிவர்த்திக்காக

பித்ரு தோஷம், தாரதோஷம், புத்திரதோஷம், பெண் சாபம் போன்ற தீராத தோஷம் இருப்பவர்கள், முன்னோர்களின் புண்ணியங்கள் இப்பிறவியில் தமக்குக் கிடைக்க விரும்பி புஷ்பராகம் அணிவது நல்லது. முன்னோர் செய்த புண்ணியங்கள் கிடைத்து அதனால் இப்பிறவியில் இருக்கும் தோஷங்கள் விலகினால் நன்மைகள் உண்டாகும். திருமண தடைகள் விலகும். குருபலம் பெருகும். குழந்தை பிறக்கும். தொழில் விருத்தியாகும்.

எப்போது அணிய வேண்டும்?

புஷ்பராகத்தை வியாழக்கிழமை, வியாழ ஓரையில் அணிய தொடங்க வேண்டும். வியாழக்கிழமை முழுவதும் அணிந்திருப்பது நல்லது. வியாழதிசை, வியாழபுத்தி நடக்கின்றவர்கள் புஷ்பராகத்தை நாள் முழுக்க கையில் அணிந்திருக்கலாம். குழந்தை வரமருளும் கனக புஷ்பராகம் தாம்பத்திய வாழ்வில், குழந்தை பெறுவதில் பிரச்னை உள்ளவர்கள், கருத்தரிக்கும் நாட்களில் தாம்பத்திய வேளையில் இருவரும் புஷ்பராகம் அணிந்து இணைவது சிறந்த பலனைத் தரும்.

குழந்தைக்கு புஷ்பராகம்

பிறவி யோகி ஆகிய வியாழன், குழந்தை பிறந்ததிலிருந்தே பலன் தர தொடங்கி விடுவான். குழந்தை வளர வளர அதனுடைய கர்மபலனை அது அனுபவிக்கத் தொடங்குகிறது. எனவே, கர்ம தோஷங்கள் தீர குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு கனக புஷ்பராக மோதிரத்தை பள்ளியில் அனுமதித்தால், தங்கத்திலும் அனுமதிக்கவில்லை என்றால், வெள்ளியிலும் செய்து கல்லின் ஒளி விரலின் மீது படும்படியாக ஓபன் கட் டிசைனில் செய்து ஆட்காட்டி விரலில் மாட்டி விட வேண்டும்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள்

3,12,21,30 – ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் கனக புஷ்பராகம் அணியலாம். மூன்று என்ற எண் வியாழகிரகத்துக்குரிய எண் ஆகும். இவர்கள் கனக புஷ்பராகத்தை அணியும்போது மகிழ்ச்சி, செல்வம், வெற்றி, அதிர்ஷ்டம், ஞானம், ஆகியவை கிடைக்கும்.

3 – ஆம் எண்ணுக்கு நன்மைகள் யாவை

3,12,21,30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் புஷ்பராகம் அணிந்தால் சிறந்த நகைச்சுவையாளராக கற்பனைத் திறன் மிக்கவர்கராக, வசியசக்தி உடையவராக, யாரையும் சம்மதிக்க வைக்கும்படி இனிமையாகப் பேசக்கூடியவராக விளங்குவர். இவர்களே சிறந்த எழுத்தாளர், ஆசிரியர், விற்பனையாளர், நடிகர் போன்றவர்களாக புகழுடன் விளங்குவார்கள்.

இதயம் வலிமை பெறும்

கனக புஷ்பராகம் இதயம் பலவீனமாக உள்ளவர்கள் அணியலாம். இது இதயத்தை பலப்படுத்தும் சிறந்த மருந்தாக அமையும். அழுகையும் மகிழ்ச்சியும் இவர்களை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

ஆசை நூறு வகை

3 – ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இதயத்தில் ஆசைகளும் ஏக்கங்களும் அதிகம் உண்டு. அது பேராசை கிடையாது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனலாம். நியாயமான ஆசைகள் நிறைய இருக்கும் ஆனால், வெளியில் பார்க்கும்போது தெரியாது. சொல்லமாட்டார்கள்.

ஆசை நிறைவேறும்

`அமைதிப்படை’ படத்தில் அமாவாசையாக நடித்த சத்யராஜ், அரண்மனைக்கு சொந்தக்காரனாக வேண்டும் என்று கூறியது போல, வாழ்வின் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும், மிக உன்னதமான உயர்வான நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் இருக்கும். தான் ஆசைப்பட்டதை அடையும் அறிவும் நுட்பமும் விவேகமும் சில வேலைகளில் குள்ளநரித் தந்திரமும் இருக்கும். பொதுவாக, இவர்கள் தவறான வேலைகளில் ஈடுபடுவது கிடையாது.

ஆட்காட்டி விரலில் அணிந்தால் தேஜஸ்

புஷ்பராகத்தை ஆட்காட்டி விரலில் (குரு விரல்) அணிவதால், முகம் தேஜசுடன் விளங்கும். உடம்பில் பாசிட்டிவ் எனர்ஜி எப்போதும் இருக்கும். மனதில் மன அழுத்தம், மனக்
கவலை போன்றவை வராது.

தொகுப்பு: பிரபா எஸ். ராஜேஷ்

The post கனக புஷ்பராகம் appeared first on Dinakaran.

Related Stories: