எண்ணூரில் மிதக்கும் எண்ணெய் படலம் நவீன முறையில் அப்புறப்படுத்த மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு: மாதிரியை சேகரித்த அதிகாரிகள்

திருவொற்றியூர: எண்ணூரில் மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பாக, நவீன முறையில் மாதிரியை சேகரித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை நவீன முறையில் அப்புறப்படுத்துவது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கனமழை காரணமாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்ததால், எண்ணூர் முகத்துவார ஆற்று நீர் மற்றும் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம் போன்ற பல பகுதிகள் மற்றும் கடலில் எண்ணெய் படலம் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் சேதமானதோடு மீன், இறால், நண்டு போன்றவை செத்து மிதக்கின்றன.

இந்த எண்ணெய் படலம் கடந்த ஒரு வாரமாக மிதந்து கொண்டிருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கடலோரப் பகுதியில் வசிக்கும ்மீனவர்களுக்குக்கு தோல் பிரச்னை, சுவாச கோளாறு, கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் முகத்துவார ஆற்றில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் யாரும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இந்த எண்ணெய் படலம் குறித்து ஆய்வு செய்த தமிழக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து உபரி நீரில் கலந்ததால், இந்த எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எண்ணூரில் ஆய்வு செய்து எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தும் பணி மற்றும் மீனவர்களுக்கு வேண்டிய உதவிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கடலோர காவல் படையினர், எண்ணெய் படலம் தானாக கரைந்து விடும் வகையில் நேற்று எண்ணூர் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் ஓஎஸ்டி என்ற ரசாயன பவுடரை தூவினர். ஆனாலும் அடுத்தடுத்து இந்த எண்ணெய் படலம் வந்து கொண்டிருப்பதால் நவீன முறையில் இதை அப்புறப்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், எண்ணூரில் முகத்துவார ஆற்றில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாசு கட்டுப்பாட்டு துறை செயலாளர் கண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று எண்ணூருக்கு வந்தனர். அங்கே எண்ணெய் உறிஞ்சும் நவீன அட்டை மூலம் ஆற்றின் மேலே படர்ந்திருந்த எண்ணெய் படலத்தின் மாதிரியை எடுத்தனர். அதனை சேகரித்து ஒரு பேரலில் அடைத்து வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘‘2017ம் ஆண்டு எண்ணூர் பகுதியில் கப்பலில் இருந்து கசிந்து கடலில் தேங்கிய கச்சா எண்ணெய்யை அகற்றிய முறையிலேயே தற்போது நவீன முறையில் முகத்துவார ஆற்றில் படர்ந்து இருக்கும் எண்ணெய் படலத்தை முற்றிலுமாக அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான முதற்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளோம்,’’ என்றனர்.

* ஆணையர், கலெக்டர் விசாரணை

திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டுக்கு உட்பட்ட எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியில் மழை நீருடன் எண்ணெய் கழிவுகள் கலந்து அங்குள்ள வீடுகளில் படர்ந்து சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் சுகாதார அதிகாரி லீனா ஆகியோருடன் எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனிக்கு நேற்று வந்து பாதிப்படைந்த பகுதியில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவும் முகத்துவார ஆற்றின் மேம்பாலம் அருகே எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

* பள்ளியை திறப்பதில் சிக்கல்

திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். கடந்த வாரம் பெய்த கன மழையால் இந்த பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. அதனோடு தற்போது எண்ணெய் படலமும் கலந்து பள்ளியில் உள்ள டேபிள், சேர், சுவர் என அனைத்திலும் படிந்துள்ளது. இதை சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில், இந்த பள்ளியை மட்டும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று கவுன்சிலர் சாமுவேல் திரவியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்த பள்ளியை ஆய்வு செய்து, பள்ளி முழுவதும் உள்ள எண்ணெய் படலத்தை விரைவாக அப்புறப்படுத்தி பள்ளியை திறக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு சென்று, அங்கு கச்சா எண்ணெய் கசிவு குறித்து நிறுவன உயர் அதிகாரிகளிடம் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.

* பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதம்

அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், இந்த எண்ணெய் படலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்தில் இருந்து வெளியே வருகிறது. நீண்ட காலமாக யாருக்கும் தெரியாமல் கசிந்து வந்த இந்த எண்ணெய் படலம், தற்போது உபரி நீரில் கலந்து வெளியே வந்ததால் ஒட்டுமொத்த ஆற்றையும், ஆற்றுவாழ் உயிரினங்களையும் பாதிக்க வைத்துள்ளது. இந்த எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தினாலும் இந்த முகத்துவார ஆறும், கடலும் மாசுபட்டுவிட்டதால் இனி வரக்கூடிய காலங்களில் மீன் இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றையும் கடலையும் நம்பி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மீனவர்களுக்கு நிவாரண உதவியை வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

* மீனவர்கள் சாலை மறியல்

சிவன் படை வீதி பகுதி மீனவர்கள், முகத்துவார ஆற்றில் இறால், நண்டு, மீன்களை பிடித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த ஆற்றில் எண்ணெய் படலம் இருப்பதால் கடந்த ஒரு வாரமாக தொழில் செய்ய முடியாமல் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக எண்ணூர் அனைத்து கிராம பொதுநல சங்கம் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர் தாசில்தார் சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திற்கு வந்து கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமரசம் பேசியதையடுத்து போராட்டத்தை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

The post எண்ணூரில் மிதக்கும் எண்ணெய் படலம் நவீன முறையில் அப்புறப்படுத்த மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு: மாதிரியை சேகரித்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: